SHARE

பிரித்தானியாவின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுகள் பற்றிய குழுவின் அங்கத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான LEO DOCHERTY யை சந்தித்த தமிழ் இளையோர் குழு, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுத விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான அழுத்தத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

RUSHMOOR  கவுன்சில் அலுவலகத்தில் நேற்றய தினம் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த செயற்பாட்டாளர்களான சிவராஜ் சிவசுதன், லட்சுமன் தெய்வேந்திரன், ஏ.என். பிரியங்கா, அகிலன் தங்க வேலாயுதம் மற்றும் நிஷாந்தன் அற்புதானநதன் ஆகியோரே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இச்சந்திப்பில் பிரித்தானியாவிடமிருந்து தொடர்ந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு நாட்டிலுள்ள தமிழ் மக்கள் மீது எவ்வாறான தொடர் இன அழிப்பை அடக்கு முறைகளை செய்து வருகின்றது என்பது குறித்தும் தமிழர் வாழ் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள இராணுவ மயமாக்கல் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டது.

அதேவேளை, யுத்த குற்றம் புரிந்த விதிமுறைகளை மீறும் நாடுகளிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என்ற ஐ.நா. ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரித்தானியா, பாரிய யுத்த குற்றம் இழைத்துள்ள இனப்படுகொலை இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றது என்பதை இந்த சந்திப்பின் போது குழுவினர் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email