SHARE

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி  இந்தியாவின்  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர்களிற்குச்  சொந்தமான 4 நாட்டுப்படகுகளை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த இரண்டு நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது  படகின் உரிமையாளர்கள் தமது படகுகள் நாட்டுப்படகு வகையை சேர்ந்தவை எனவும் றோலர் படகுகளே நீண்ட தூரம் பயணிக்க கூடிய நிலையில் இவை தவறுதலாகவே எல்லை தாண்டியதாக  நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவற்றினை ஆராய்ந்த நீதிபதி ஏ.யூட்சன்  இனிமேல் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட கூடாது என்று  எச்சரித்து இரண்டு படகையும் விடுவித்து உத்தரவிட்டார்.

இதேநேரம் வேறு இரு படகுகள் தொடர்பில் ஓர் படகின் உரிமையாளர் அற்றோனிக்பவரை (attorney power) வேறு நபருக்கு வழங்கிய நிலையில் அவர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையான போது அதனை நிராகரித்த மன்று உரிமையாளரை மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டது.

Print Friendly, PDF & Email