SHARE

யாழ்.கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பொலிஸ் அணியினர் தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.

கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை களம் இறக்கபட்ட விசேட பொலிஸ் அணியினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் இருந்து களமிறக்கப்பட்ட பொலிசாரே குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

யாழில். அண்மைகாலமாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகிக்கப்படும் நபர்கள் கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தலைமறைவாக இருக்கின்றார்கள் எனும் இரகசிய தகவல் பொலிசாருக்கு கிடைக்க பெற்றதை அடுத்து யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாமல் , குறித்த பகுதியில் இனம் காணப்பட்ட வீடுகளிலேயே தேடுதல்களை மேற்கொண்டதாகவும் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்களின் பொதிகளை சோதனையிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் , சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எவையும் கைப்பற்றப்பட வில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு ஒரு மணித்தியால இடைவெளியில் நான்கு இடங்களில்  வன்முறைகளில் ஈடுபட்டது.

குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , கடந்த இரு நாட்களாக கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைகளிலும் , சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email