SHARE

பிரித்தானிய பொலிஸாரால் அடாத்தாக கைது செய்யப்பட்டு தடுத்து வகைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட நால்வரை விடுதலை செய்யும் வரை அங்கிருந்து வெளியேறப்போவதில்லை என கைது செய்யப்பட்ட எண்மரில் இன்று விடுதலையான செயற்பாட்டாளர்கள் நால்வர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் இன்று காலை விடுதலை செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான கொலின் யோசப், குஜியந்தன் சிவபாலன், கோல்டன் நிமால் மற்றும் மயூரன் தாமோதரம் பிள்ளை ஆகிய நால்வரே ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானிய வருகை தந்திருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்றய தினம் ஒக்ஸ்போர்ட் யூனியனில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தொடர்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அதேநேரம் இனப்படுகொலை அரசின் பிரதமர் ரணிலுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பிரித்தானிய தமிழர் ஒன்று திரண்டு ஒக்போர்ட் யூனியனின் முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு வந்திருந்த இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் திட்டமிட்டு வெண்டுமென்றே அவர்கள் பயங்கரவாதிகளின் கொடிகளை வைத்திருக்கிறார்கள் என காவலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கினார். இதனையடுத்து அடாத்தாக செயல்பட்ட பொலிஸார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு சமூகநல பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட தமிழீழ தேசிய கொடிகளை வைத்திருந்தவர்கள் என 8 பேரை கைது செய்தனர்.

இந்நிலையிலேயே விசாரணைகளின் பின்னர் மேற்படி நால்வரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் செயற்பாட்டாளர்களான சிவசுதன், தனுசியன், சகாயராஜா பெர்ணான்டோ ஆகியோர் தேம்ஸ்வரி ஒக்ஸ்போர்ட் பொலிஸ் காவல்நிலையத்தில் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடிக்கு சட்டபூர்வ தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email