SHARE

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று (9) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்றN முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நடவடிக்கை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டடில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

“வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் – அதனை அண்டிய பகுதிகள், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு பொலிஸ் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொக்குவிலில் உள்ள வாள்வெட்டுக் குழு மானிப்பாயிலும் மானிப்பாயிலுள்ள வாள்வெட்டுக் குழு கொக்குவிலும் அட்டூழியங்களில் ஈடுபடுவதாக விசாரணைகளில் தெரியவந்தது.

அவற்றை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும் 21 சந்தேகநபர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அத்துடன், தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளும் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email