SHARE

EDM இல் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டு நாடாளுமன்ற ஆளும்கட்சி உறுப்பினர் Chris Philp ஐ சந்தித்த தமிழ் இளையோர் குழுவொன்று குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளனர்.

இராசேந்திரம் சுதன் தலைமையிலான செயற்பாட்டாளர்களான சுரேஸ் சுப்பிரமணியம், பொன்னம்பலம் குணசீலநாதன் மற்றும் சிறிதரன் அருள்சீலி ஆகியோரே இன்று நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது. இதனால் சிங்களபேரினவாதத்தின் இரும்புக்கரம் மேலும் ஓங்க வழிவகுப்பதுடன் தமிழர்கள் மீதான அடக்குமுறையும் தொடர்கின்றது.

எனவே, பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் இளையோர், தமிழ் தகவல் நடுவத்துடன் (TIC) இணைந்து சட்டவாளர் கீத் குலசேகரத்தின் ஆலோசனைகளுடன் பிரித்தானியாவில் சுமார் 11 மாத காலங்களை கடந்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரித்தானியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் சார்ந்த தொகுதியில் வசிக்கும் இளையோர்கள் சந்தித்து மேற்படி விடயம் தொடர்பில் எடுத்துக்கூறி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிவருகின்றனர்.
இதன் பயனகாக தற்போது குறித்த ஆயுத விற்பனை விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதிக்க முன்பிரேரணை (EDM) கொண்டுவரப்படவுள்ளது. அதற்கான மனுவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களில் கையொப்பங்களை பெற இளையோர் தொடர்ந்தும் நாடளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே, இராசேந்திரம் சுதன் தலைமையிலான குழுவினர் Croydon South தொகுதி நாடளுமன்ற உறுப்பினரான Chris Philp இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது குழுவினர் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த ஆயுத விற்பனை விவகாரம் தொடர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு அறியப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தகோரி நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள 1480 இலக்கம் கொண்ட முன்பிரேரணைக்கான மனுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உட்பட இதுவரையில் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email