SHARE

இலங்கையுடனான பிரித்தானியாவின் ஆயுதவிற்பனை குறித்த முன்பிரேரணைக்கான மனுவில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Rushanara Ali கையொப்பமிடுவதாக உறுதியளிதுள்ளார்.

ஆயுத விற்பனையை நிறுத்த தொடர்ச்சியாக போராடிவரும் தமிழ் இளையோர் குழுவினருடனான சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனைசெய்வதை நிறுத்தவேண்டுமென்ற புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றில் இது குறித்த விவாதமொன்று நடைபெறவுள்ளது.

குறித்த விவாதத்திற்கான முன்பிரேரணை கொண்டுவருவதற்காக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகளை பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் தீவிரமாக திரட்டி வருகின்றனர்.

அந்தவகையில், ரூபகுமார் ராஜரட்ணம் தலைமையிலான செயற்பாட்டாளர் பிரசாத் சத்தியசீலன் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷாந்தன் தியாகராஜா ஆகிய மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர் Rushanara Ali யை நேற்றய தினம் சந்தித்தனர்.

Bethnal green and bow தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அவரிடம் பிரித்தானியா இலங்கைக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்வதால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி குழுவினர் எடுத்து விளக்கியதுடன் மேற்படி முன்பிரேரணைக்கான ஆதரவையும் கோரினர்.

இந்நிலையிலேயே, குறித்த முன்பிரேரணைக்கான மனுவில் கையொப்பமிடுவதாக உறுதியளித்த அவர் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன அடக்குமுறை குறித்தும் விசனம் தெரிவித்தார். அதேவேளை, இந்த ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் முன்பிரேரணை நாடாளுமன்ற விவாதத்திற்கு வரும்போது அதற்கு தான் முழு ஆதரவு அளிப்பேன் எனவும் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரேரணைக்கான ஆதரவு பெருகிவுரும் நிலையில் இலங்கை அரசு ஆயுதக்கொள்வனவில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளது. 1480 இலக்கம் கொண்ட முன்பிரேரணைக்கான மனுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உட்பட இதுவரையில் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email