SHARE

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் நேற்று திங்கட்கிழமை தனது 66 ஆவது வயதில் காலமானார்.

ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக, சிறந்த நாவலாசிரியராக, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்த இவர், பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த, தம்பையா சிதம்பரநாதன் அவர்களின் மூத்த புதல்வரான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர்.

1972ஆம் ஆண்டில் வீரகேசரியில் சிறுகதைகளை எழுத ஆரம்பித்த, இவர், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான, ஈழநாடு, ஈழமுரசு, சிரித்திரன், அமிர்தகங்கை, நமது ஈழநாடு, ஈழநாதம்,வெளிச்சம், தளவாசல், ஆதாரம், உள்ளம்  உள்ளிட்ட நாளிதழ்கள், இதழ்களிலும், கொழும்பில் இருந்து வெளியான இதழ்களிலும் ஏராளமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார்.

முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்துவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்ளிட்ட – இவரது சிறுகதை தொகுப்புகளும், நாவல்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் சிங்கள மொழியாக்கம் செய்து  நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

ஈழப்போராட்டத்தின் பின்னணியிலான வாழ்வியல் சூழலைப் பிரதிபலிக்கும் காத்திரமான இலக்கியப் படைப்புகளை இவர் வெளிக்கொணர்ந்தவராவார்.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.

Print Friendly, PDF & Email