SHARE
காணி விடிவிப்பு தொடர்பான கூட்டத்தில் படையினர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் முப்படைகள் மற்றும் பொலிஸ் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஏற்படுகின்ற கால தாமத்திற்கு, தாம் கோரியுள்ள பணமானது அரசாங்கத்தால் வழங்கப்படாமையே காரணம் என காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தில் படைத் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவ்வாறு இராணுவம் கோருகின்ற பணமானது பாதுகாப்பு நிதியூடாகவே வழங்கப்பட வேண்டுமே தவிர அது மக்களின்மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியில் இருந்து வழங்கப்பட முடியாது என்பதனையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியோரிடம் உள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் இது வரை விடுவிக்ப்பட்ட காணிகள் மற்றும் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எவை என்பன தொடர்பாக ஆராயும் கூட்டமானது மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்றல் தர்சனஹெட்டியராச்சி, பொலிஸ் உயர் அதிகாரி, கடற்படை தளபதி மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடல் தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நில விடுவிப்பு தொடர்பான படைத்தரப்போடு இடம்பெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இக் கூட்டம் அமைந்திருந்தது. இக் கூட்டத்தில் பொலிஸ் படைத் தரப்பு, கடற்படை ஆகியோர் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகள் தொடர்பாகவும், இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது.

படைத்தரப்பை பொறுத்தவரையில் கடந்த கூட்டத்திற்கு பின்னர் இக் கூட்டத்தில் அதிகளவான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்படையானது சொற்ப அளவிலான காணியையே விடுவித்துள்ளது. இது தொடர்பாக கடற்படை விடுவிக்கவுள்ள காணிகளின் நேர அட்டவனையை வழங்குமாறு அவர்களிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இக் கூட்டத்தின் போது படைத்தரப்பானது பல ஏக்கர் காணிகளை தாம் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கூறியிருந்தார்கள். ஆனால் அதற்கு அவ்விடங்களில் உள்ள இராணுவத்தை இடமாற்றம் செய்யும் இடமும் அதற்கான பணமும் கிடைத்தால் அவற்றை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்தார்கள்.

அதேபோன்று மக்களது காணிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களினையும் அப்புறப்படுத்த காணியும் பணமும் தேவையாகவுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேநேரம் புதிய பொலிஸ் நிலையங்களை கட்டுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி விடுவிக்கப்படாமையே காரணாமாக கூறப்பட்டது.

மேலும் ஜனாதிபதி கூறியது போன்று எதிர்வரும் மார்கழி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என கூறியிருக்கும் நிலையில் அதனை செயற்படுத்துவது தொடர்பாக தாம் துரிதமாக செயற்படிவதாக இராணுவ கட்டளை தளபதி தரசன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படைத்தரப்பும் பொலிஸ் தரப்பினரும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பணம் அரசாங்கத்தால் விடுவிக்கப்படாமையே காரணம் என கூறியிருந்தனர். எனவே இது தொடர்பாகவும் நாம் அரசாங்கத்துடன் பேச வேண்டியுள்ளது. ஏற்கனவே மக்களின் மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாதுள்ளது என கூறியிருக்கின்றோம். எனவே இவை தொடர்பாகவும் அரசாங்கத்துடன் பேசவுள்ளோம்.

இதேவேளை இக் காணிவிடுவிப்புக்கள் தொடர்பாக கடந்த ஜனாதிபதி தலமையிலான செயலணியின் போது வடக்கு கிழக்கு ஆளுநர்களை கூட்டங்களை நடாத்தி அது தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி கூறியிருந்தார். அதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். அக் கூட்டத்தில்  நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். குறிப்பாக கடற்படையினர் காணி விடுவிப்பு தொடர்பான தமது அட்டவனையை தருவதாக கூறியிருக்கின்றார்கள் என்றார்.

Print Friendly, PDF & Email