SHARE

ஐ.நா. அமைதிகாக்கும் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ வீரரை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு இலங்கை அரசுக்கு ஐக்கியநாடுகள் சபை பணித்துள்ளது.

மாலியில் உள்ள ஐ.நா. அமைதிப்படைகளில் 200 பேர் கொண்ட குழுவின் தலைவராக உள்ள லெப்டினன் கேர்ணல் கலானா அமுனுபுர என்பவரையே மீளப்பெறுமாறு பணித்துள்ளது.

குறித்த வீரருக்கு எதிராக யுத்த குற்றம் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையின் ஆய்வுகளின் அடிப்படையிலேயே ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் Stephane Dujarric இந்த அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ளார்.

யுத்தகுற்றவாளியான கலானா அமுனுபுர 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் 58 ஆவது படைப்பிரிவில் இடம்பிடித்திருந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் ஐ.நா. அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளுக்காக லெபனான் செல்லவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் ஐக்கியநாடுகள் சபையால் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக தமிழர் தரப்பினரிடமிருந்தும் கண்காணிப்பு குழுவினரிடமிருந்தும் ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, தற்போது மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லெப்டினன் கேர்ணல் கலானா அமுனுபுரவும் போர்க்குற்றம் தொடர்பிலான முறைப்பாடுகளின் அடிப்படையில் நாட்டிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

ஜக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு ஏற்ப ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தேர்ந்தெடுக்கு பொறிமுறைகளை அமைத்து இலங்கை அரசு அதனை திறம்பட அமுல்படுத்தும் வரை இலங்கை இராணுவத்தினர் ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஜ.நா. தெரிவித்துள்ளது.

ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தின் பொதுச்செயலாளர் லக்கிரி (JEAN-PIERRE LACROIX) சர்வதேச இன அழிப்பு மற்றும் வழக்காடு மையத்திற்கு ((ICPPG) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email