SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில், இந்தப் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில், புதிய கட்சியின் செயலாளர் நாயகமான அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றது.

மதத் தலைவர்கள், முன்னிலையில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்சியின் ஆரம்ப நிகழ்வில், 20 இற்கும் குறைவானவர்களே பங்கேற்றிருந்தனர்.

முன்னதாக, தமிழ் அரசுக் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக, அனந்தி சசிதரன், அந்தக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நிறுத்தப்பட்ட அனந்தி சசிதரன், சுமார் 87,000 விருப்பு வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் முரண்பட்டுக் கொண்ட அவர், பின்னர், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து செயற்பட்டதுடன், அவரால் வடக்கு மாகாண அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், முடிவடைய இன்னும், மூன்று நாட்களே உள்ள நிலையில், அனந்தி சசிதரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email