SHARE

பிரித்தானியாவில் அண்மையில் விடுதலைப்புலிகளின் கொடியை காண்பித்தமைக்காக கைதுசெய்யபட்ட நான்கு தமிழர்களிற்கு எதிராக அந்த நாடு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரித்தானியா விஜயத்தின் போது ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்டுடனான சந்திப்பிலேயே சம்பிக்க ரணவக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணியில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக நாடுகடந்த் தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஒக்ஸ்போர்ட் யூனியனின் முன்னால் நடத்தப்பட்டது. இதில் தமிழீழ தேசிய கொடியை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட நால்வர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படனர்.

இந்நிலையிலேயே சம்பிக்க ரணவக்க மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர் விடுதலைப்புலிகளின் கொடிகளை காண்பித்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிட்டன் தனது பயங்கரவாதத்திற்கு எதிரான சொந்த சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் இவ்வாறான நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு ஆதரவளித்து வந்தால் அவை இலங்கையின் நல்லிணக்கங்களை பாதிப்புக்குட்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email