SHARE

பெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கைவைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கிய முறைப்பாபாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கைத் துரிதமாக விசாரணை செய்து பின்னணியிலிருப்போரைக் கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு அவரது கைபேசியில் குறுந்தகவல் கடந்த மாதம் ஒன்று வந்துள்ளது. உங்களுக்கு பெறுமதியான பரிசில் ஒன்று விழுந்துள்ளது என்று அந்தத் தகவல் அமைந்துள்ளது.

அதனை நம்பிய அவர், பதில் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து அவருக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர், தங்களுடைய பரிசிலை உரியவாறு சமர்ப்பிப்பதற்கு 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை குறித்த தனியார் வங்கியில் வைப்புச் செய்யுமாறு கணக்கு இலக்கத்தை வழங்கியுள்ளார்.

அந்தக் கணக்குக்கு குடும்பத் தலைவர் உரிய தொகைப் பணத்தை வைப்புச் செய்துள்ளார். எனினும் பணம் வைப்பிலிட்டு ஒரு மாதகாலமாகியும் அந்தப் பரிசில் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் குறித்த கணக்கு இலக்கத்தை வைத்து குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.

அந்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை முதல் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வங்கியின் கணக்கு அறிக்கையைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மோசடியின் பின்னணியில் உள்ளோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

Print Friendly, PDF & Email