SHARE

“சஜித் பிரேமதாச , கரு ஜயசூரிய அல்லது நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டால் அதனை பரிசீலிக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் நான் மீண்டும் ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன். இப்போதுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணவேண்டுமானால் இதனை பரிசீலிக்குமாறு  சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லுங்கள்”

இப்படி நேற்று மாலை ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

கட்சித் தலைவர்களான மனோ கணேசன் , ரவூப் ஹக்கீம் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு எப்படியான தீர்வை எடுப்பது என்பதை பற்றி இந்த சந்திப்பில் தீவிரமாக பேசப்பட்ட போதும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

எனினும் இந்த சந்திப்பின் பின்னர் அலரி மாளிகைக்கு வந்த மேற்படி தலைவர்கள் மூவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.

எவ்வாறாயினும் நேற்று பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த அனைத்து கட்சித் தலைவர்களுடனும் இன்று காலை பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதில் ரணிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை முன்மொழிவதென்றும் அதற்கு ஆதரவான எம் பிக்களின் கையொப்பம் அடங்கிய மனுவை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவும் ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது..

Print Friendly, PDF & Email