SHARE
-விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித் தரும்படியும் சகோதரன் கோரிக்கை

யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தும் ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்வது நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல் என்பதை தான் உணர்வதாக தெரிவித்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Virendra Sharma, ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் முன்பிரேரணைக்கான மனுவில் கையொப்பமிடுவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையடுத்து பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இலக்கம் 1480 கொண்ட முன்பிரேரணைக்கான (Early day motion) மனுவிலேயே Southall தொகுதி எம்.பி.யான அவர் கையொப்பமிடவுள்ளார்.

செயற்பாட்டாளர் சிதம்பரநாதன் சைலேசன் தலைமையிலான கந்தசாமி விமலரட்ணம், சுரேஷ் சுப்பிரமணியம், மற்றும் பற்றிக் பிரான்சிஸ் வசந்தராஜன் பீரிஸ் ஆகியோர் கொண்ட குழுவினருடனான சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சந்திப்பில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பு, காணாமல் ஆக்கப்படுதல், திட்டமிட்ட காணி அபகரிப்பு போன்ற பல விடயங்களும் குழுவினரால் எம்.பி.க்கு எடுத்து விளக்கப்பட்டது.

இவைகள் தொடர்பில் பிரித்தானிய அரசு கவனம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் குழுவினர் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, இக்கலந்துரையாடலில் பங்கேற்றவர்களில் ஒருவரான விமலரட்ணம் இறுதி யுத்தத்தில் காணமாமல் போன தனது ஒன்றுவிட்ட சகோதரரான விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித் தருமாறும் எம்.பி.யிடம் விசேட கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த அவர் பின்னர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானிய அரசை நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் இளையோர் தமிழ் தகவல் நடுவத்துடன் (TIC) இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பயனாகவே குறித்த விவகாரம் தற்போது பாராளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான முன்பிரேரணை நிலையை (EDM) அடைந்துள்ளது.

குறித்த முன்பிரேரணையில் இதுவரையில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email