SHARE
யாழ் குடாநாட்டில் பொய் வழக்குகளை போடும் பொலிஸார் கொடூர சித்திரவதையும் செய்கின்றனர்– சமூக நீதிக்கான இளைஞர் அணி

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸார் செயற்படுவதுடன், அவர்களை கைது செய்து சித்திரவதை செய்வதுடன், பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின்  பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமூக நீதிக்கான இளைஞர் அணி அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில் ,

எமது பிள்ளைகள் வேறு சில இளைஞர்களுடன் இணைந்து சில குற்றங்களுடன் தொடர்புபட்டு அதற்காக நீதிமன்றத்தின் ஊடாக தண்டணை பெற்று பின்னர் எந்த விதமான குற்றங்களுடனும் தொடர்புபடாமல் அமைதியாக வாழ நினைக்கும் நிலையில் பொலிஸார் அவர்களை இலக்குவைத்து தொடர்ச்சியாக வீடு புகுந்து கைது செய்வதும், பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்வதும், சம்மந்தமே இல்லாமல் வழக்குகளை பதிவு செய்வதுமாக இருக்கின்றார்கள்.

இதனால் எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. இதற்கு நீதிமன்றங்கள் ஊடாக எமக்கு நீதி வழங்கப்படவேண்டும் என கூறினர்.

கருணாகரன் நாகேஸ்வரி எனும் தாய் கூறுகையில்,

கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் எனது பிள்ளை வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் வந்த பொலிஸார் எனது பிள்ளையை பிடித்து சென்றனர்.

உடனடியாக நாங்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது தாங்கள் அவ்வாறு எவரையும் கைது செய்யவில்லை. என பொலிஸார் கூறிவிட்டனர்.

பின்னர் எனது பிள்ளையை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் நின்றிருந்த நிலையில் அவர்களை கேட்டபோது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.

பின்னர் நாங்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம். அங்கே என்னுடைய பிள்ளையை கட்டிவைத்து அடித்துள்ளார்கள். அதனால் எழுந்து நிற்க முடியாத நிலையில் நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கு வாகனத்தில் ஏற்றும்போது நிற்க முடியாமல் எனது மகன் நிலத்தில் சுருண்டு விழுவதை கண்ணாலே பார்த்தேன் என கூறி அழுதார்.

தொடர்ந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு 3 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். எனக்கு நன்றாக தெரியும் அந்த 3 வழக்குகளிலும் என்னுடைய பிள்ளை சம்மந்தப்படவில்லை. திருந்தி வாழவேண்டும் என்று வீட்டிலேயே இருந்த பிள்ளையை பிடித்துக் கொண்டு சென்று வழக்குகளை போட்டிருக்கிறார்கள் என்றார்.

ரா.ஜெனீற்றா என்றகுடும்ப பெண் கருத்து தெரிவிக்கையில்,

2014ம் ஆண்டு வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். என எனக்கு தகவல் கிடைத்து. எனது சகோதரனுக்கும் பெயர் வினோத். ஆகவே எனது சகோதரன்தான் கைது செய்யப்பட்டுள்ளார். என நினைத்து நான் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது அங்கே நின்ற பொலிஸார் என்னுடைய அடையாள அட்டையினை என்னிடமிருந்து வாங்கினார்கள்.

பின்னர் கைது செய்யப்பட்டது எனது தம்பி என நம்பிக் கொண்டிருந்த நான் பொலிஸ் சிறையில் பார்த்தபோது அது என்னுடைய சகோதரன் அல்ல. பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் விடயத்தை கூறியபோதும் எனது அடையாள அட்டையினை தரவில்லை.

இந்நிலையில் அங்கிருந்த பொலிஸார் ஒருவர் என்னை அங்கிருந்து உடனடியாக வெளியே போகுமாறு கூறினார்.

மேலும் என் மீது வழக்கு பதிவு செய்ய பொலிஸார் யோசிக்கிறார்கள் எனவும் கூறினார்.

இதனால் நான் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டேன். மறுநாள் சகல பத்திரிகைகளிலும் செய்தி வருகிறது “ஆவா” குழுவின் பெண் உறுப்பினர் கைது. என அந்த வழக்கு 4 வருடங்களாக இன்றும் நடக்கிறது.

வெளிநாட்டில் திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களில் வெளிநாடு செல்லவேண்டிய நான் இந்த வழக்கினால் வெளிநாடு செல்ல முடியாத நிலையில் 4 வருடங்கள் கழித்து வெளிநாட்டில் உள்ள எனது கணவர் எனக்கு இப்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். என்னுடைய பிள்ளை இன்றுவரையில் தனது அப்பாவை நேரில் பார்த்ததில்லை.

நான் இழந்த வாழ்க்கையை, நான் பட்ட அவமானங்களை கோப்பாய் பொலிஸாரால் திருப்பி கொடுக்க முடியுமா? இன்றுவரைக்கும் என்னையும் என் சகோதரர்களையும் பொலிஸார் விட்டுவைக்கவில்லை. இப்போதும் வீடு புகுந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். எனது சகோதரர்களை தேடிக் கொண்டே இருக்கிறார்கள் என அழுதபடி கூறினார்.

தொடர்ந்து சமூக நீதிக்கான இளைஞர் அணியின் பிரதான அமைப்பாளர் அருளாணந்தம் அருண் கருத்து தெரிவிக்கையில்,

ஆவா குழு என்றொரு குழுவே யாழ்ப் பாணத்தில் இல்லை. இளைஞர்களுக்கிடையில் உருவாகும் மோதல்களை வைத்துக் கொண்டு திட்டமிட்டு குற்றங்களை செய்யும் ஆபத்தான குழுக்கள் யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக மக்கள் மனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனை பொலிஸாரும், சில இணைய ஊடகங்களும், சில அரசியல்வாதிகளுமே செய்தார்கள். வயது கோளாறு காரணமாகவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும் குற்றம் செய்த இளைஞர்கள் திருந்தி வாழ்வதற்கு பொலிஸார் இடமளிக்கிறார்கள் இல்லை. அவர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அவர்கள் பொலிஸ் நிலையங்களில் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு தாக்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள். பாரிய குற்றங்களை செய்தவர்கள்போல் தேடப்படுகிறார்கள். பெற்றோருக்கும் தெரியாமல் கைது செய்யப்படுகிறார்கள்.

இந்த நாட்டில் சட்டம் உள்ளது. சட்டத்தின்படி குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டணை வழங்க நீதிமன்றம் இருக்கிறது.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கும் கூட பொலிஸார் தலைகீழாக கட்டிவைத்து தண்டணை கொடுக்கிறார்கள். சித்திரவதை செய்கிறார்கள். இதற்கு இந்த ஜனநாயக நாட்டின் சட்டத்தில் இடம் உள்ளதா? அண்மையில் பல்கலைக்கழக பிரதி பணிப்பாளர் ஒருவர் தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்று தொடர்பில் இளைஞர் ஒருவரை கடத்தி சென்று கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து தாக்கியதுடன், அவருடைய மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி ஆகியவற்றை பறித்துள்ளார்கள்.

அதற்கு நிதி கிடைக்கவேண்டும் என பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தும் பயனில்லை. பின்னர் வடமாகாண ஆளுநரை சந்தித்து விடயத்தை கூறி அவர் தலையிட்டதனால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

எங்களால் ஆளுநரை சந்திக்க முடிந்தது. சாதாரண சாமானிய மக்களால் ஆளுநரை சந்தித்து இந்தளவுக்கு செயற்பட முடியுமா?

அதேபோல் சுன்னாகம் பகுதியில் வைத்து எமது அமைப்பை சேர்ந்த 9 இளைஞர்களை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் நாங்கள் ஆளுநருக்கு கூறி, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கூறி பின்னர் நாங்கள் நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று கைத செய்யப்பட்டது பிழை என கூறியதன் பின்னர் 2 பேரை தவிர மிகுதி இளைஞர்கள் 5 மணித்தியாலங்கள் பூட்டிய வாகனத்திற்குள் உச்சி வெய்யிலுக்குள் வைத்திருந்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.

இது தொடர்பில் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்க ஊடகங்கள் ஆவண செய்ய வேண்டும் என்றார்.

Print Friendly, PDF & Email