SHARE
யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் சாட்சியம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு,  கடுமையான சித்திரவதை உள்ளாகியதாகவும், அதனை தாங்க முடியாது தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இரு இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இளைஞர்கள் இருவரையும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிவானின் முன்னிலையில் முற்படுத்தாது, 72 மணி நேரம் தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அந்நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் நேற்றைய தினம் வியாழக்கிழமை பொலிசார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதிஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தியுள்ளனர்.

அதன் போதே குறித்த இரு இளைஞர்களும் சட்டவிரோதமான முறையில் தாம் 72 மணித்தியாலங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளைஞர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

அதன் போது , தம்மை திருட்டு வழக்குடன் தொடர்பு என கூறி கடந்த திங்கட்கிழமை எம்மை கைது செய்து செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து கடுமையாக தாக்கினார்கள். அதனால் எனது இரண்டு கைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. பொலிசாரின் சித்திரவதையினை தாங்க முடியாது. புதன் கிழமை இரவு தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதனாலையே இன்றைய தினம் வியாழக்கிழமை பொலிசார் எம்மை நீதிமன்றில் முற்படுத்தினார்கள். இல்லையெனில் தொடர்ந்து எம்மை தடுத்து வைத்து சித்திரவதை புரிந்திருப்பார்கள். என பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நீதிவானிடம் முறையிட்டார்.

அதேவேளை மற்றைய நபரும் தானும் சட்டவிரோதமான முறையில் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானதாக நீதிவானிடம் முறையிட்டனர்.

அதனை தொடர்ந்து குறித்த இரு நபர்களையும் பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேவேளை கஞ்சா கலந்த சுருட்டுடன் நடமாடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றில் முன்னிலையாக தவறியதனால் மன்றினால் குறித்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் குறித்த சந்தேக நபரை கைது செய்த கோப்பாய் பொலிசார் அந்நபரை மூன்று நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.

சித்திரவதை தாங்க முடியாத குறித்த நபர் தனது கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். அந்நிலையில் குறித்த நபரை காப்பற்றி வைத்திய சாலைக்கு பொலிசார் கொண்டு சென்று சிகிச்சை வழங்கினார்கள்.

சிகிச்சையின் பின்னர் ககுறித்த நபரை பொலிசார் நீதிமன்றில் முற்படுத்திய போது கழுத்து மற்றும் கைகளில் காயங்களுக்கு கட்டு போட்டு இருந்தமை தொடர்பில் நீதிவான் கேள்வி எழுப்பிய போது , குறித்த நபர் தனக்கு எதிராக பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பில் நீதிவானிடம் முறையிட்டனர்.

அதனை அடுத்து குறித்த நபரை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்த நீதிவான் பொலிசாரை கடுமையாக எச்சரித்து இருந்தார். அந்நிலையில் மீண்டும் இளைஞர்கள் இருவர் கோப்பாய் பொலிசாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிசாரினால் சித்திரவதைக்கு உள்ளாகியதாக 31 முறைப்பாடுகளும் , சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தமை தொடர்பில் 13 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email