SHARE
-பிரித்தானிய எம்.பி. உறுதி

இனப்படுகொலைக்கு நீதிபெற்றுத்தருவதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினரருக்கு துணையாக ஜெனீவாவில் செயற்படுவோம் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்பிட்ஸ் பற்றிக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்பிட்ஸ் பற்றிக்கிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் தலைமையிலான அவ்வமைப்பின் உறுப்பினர்களில் தனபாலசிங்கம் சுரேந்திரன், இராஜரத்னம் ரூபகுமார் மற்றும் விக்கினராஜா விஜித்தன் ஆகியோர் கொண்ட குழுவுக்குமிடையிலான சந்திப்பொன்று பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இதன் போது இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்ச்சியாக நாடுகடந்த அரசாங்கம் வலியுத்தி வருகின்ற நிலையில் அதற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமென மேற்படி குழுவினரால் எம்.பி.யிடம் கோராப்பட்டது.

இந்நிலையிலேயே, இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்பிட்ஸ் பற்றிக் அடுத்து நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தவுள்ளதாகவும் நீதியை நிலைநாட்டுவதற்கான பயணத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி துணை இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசால் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி பிரித்தானியாவின் பல்வேறு அரச தப்புக்களுடன் புலம்பெயர் அமைப்புக்கள் தொடர் கூட்டங்களை நடத்தி வருவதுடன் இலங்கை அரசை குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதிதீவிர முனைப்புடன் இணையவழி கையொப்பங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email