SHARE

காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகம் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் பெற்று கொடுத்திராத நிலையில் வெறுமனே ஓராண்டை கடந்துள்ளது.

இதனிடையே அன்பானவர்கள் காணாமல் ஆக்கப்படுவது, அதிகமான வேதனையை ஏற்படுத்துமெனத்  தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு, சகல விதத்திலும் நியாயம் கிடைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.   

காணாமல் ஆக்கபட்டோர் அலுவலகம் நிறுவப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, இதனை அவர் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் அலுவலகத்துக்கு, ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, தமக்குரிய பணிகள் அனைத்தையும் சரிவர நிறைவேற்றக் கடமைபட்டுள்ளதாகவும் நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து, அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். 

நபரொருவர் காணாமல் ஆக்கப்படுவதால், அவரது உறவினர்கள் பெரும் வேதனையை அடைவதோடு காணாமற்போனவரை நினைவுகூறகூட முடியாத துன்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரெனக் குறிப்பிட்டுள்ள சாலிய பீரிஸ், இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

எனவே, ஒரு சமூகம் என்ற ரீதியில் இவர்களின் துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்காமல், அவர்களது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சகல உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், அவர் அந்த அறிக்கையூடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email