SHARE

முப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

யாழ்.ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தக்குற்றவாளியாக முன்னிறுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர் பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அழிக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த இந்த யுத்தக்குற்றவாளியை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி நியமித்திருப்பது என்பது நாட்டில் யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளது. 

அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவித்து யுத்தக் குற்றங்களுக்கும் உள்ளக விசாரணை போதும் என்ற நிலைப்பாட்டை அரசு ஏற்படுத்துகின்றது. 

இருப்பினும் தமிழர்கள் யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையையே வேண்டி நிற்கின்றார்கள். இந்த நிலையில் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தமிழ் மக்களுக்கு யுத்தக் குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் இடைக்காது என்பதையே காட்டி நிற்கின்றது. 

கடந்த காலங்களில் வெளிநாடுகளிற்குச் செல்லும் போது எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்த போது இன்று அவரை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது. 

நல்லாட்சி, நல்லிணக்கம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத யுத்த இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது. 

யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வரையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் ஒருபோதும் இயலாது. சவேந்திர சில்வாவினுடைய நியமனம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்கின்ற, வெறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது. 

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை உண்மையில் வெல்ல வேண்டுமாக இருந்தால் யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Print Friendly, PDF & Email