SHARE

கஞ்சாவுடன் மீனவர்கள் கைது எனும் செய்தியை மறுத்தது கடற்படை ; கைதானவர்களை பொறுப்பேற்க மறுத்தது யாழ். கடற்றொழில் நீரியல் துறை

கேரளா கஞ்சாவுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் எனும் செய்தியினை கடற்படையினர் மறுத்துள்ளனர். அதேவேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும் காயமடைந்துள்ளமையால் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் குறித்த மீனவர்களை பொறுப்பெடுக்கவில்லை. 

நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இந்திய படகொன்றை கடற்படையினர் வழிமறித்து மீனவர்களை கைது செய்தனர். 

குறித்த படகில் இருந்து 117 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. குறித்த தகவலை தற்போது கடற்படையினர் மறுத்துள்ளனர். 
குறித்த எட்டு மீனவர்களையும் கடற்படையினர் இன்று மதியம் யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போது , அவர்கள் காயமடைந்த நிலையில் காணப்பட்டு உள்ளனர். அதனால் குறித்த மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். 

அதனால் குறித்த எட்டு மீனவர்களையும் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மீனவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பில் கடற்படையினர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை அதேவேளை மீனவர்களுக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது எனும் தகவல்கள் தெரியவரவில்லை.

Print Friendly, PDF & Email