Home சிறப்புச் செய்திகள் ‘வட்டுவாகல் பாலத்தில் சவேந்திர சில்வாவிடம் சரணடைந்தவர்கள் பாலத்தின் மறுபக்கத்தில் இறந்துகிடந்தனர்’

‘வட்டுவாகல் பாலத்தில் சவேந்திர சில்வாவிடம் சரணடைந்தவர்கள் பாலத்தின் மறுபக்கத்தில் இறந்துகிடந்தனர்’

2,485 views
0
SHARE

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு எதிராக 137 பக்க ஆவணம் வெளியீடு

இறுதிப்போரின் போது வட்டுவாகல் பாலத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பிரதானிகளுடன் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தனிப்பட்ட ரீதியில் கைகுலுக்கிக் கொண்டார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் பாலத்தின் மற்றயபக்க வீதி ஓரத்தில் இறந்து காணப்பட்டனர் என நேரடி சாட்சி ஒருவர் தம்மிடம் சாட்சியமளித்தார் என இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணத்தில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது.

இலங்கையின் புடதிய இராணுவ பிரதானியாக போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தென்னாபிரிகாவை தளமாக கொண்ட உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் 2008-9 வரையான இறுதிப்போரின் போது முக்கிய களநிலை கட்டளைத்தளபதியாகவிருந்து சவேந்திரா சில்வா குறித்த 137 பக்கங்கள்’ கொண்ட ஆவணக் கோவையை வெளியிட்டுள்ளது.

குறித்த ஆவணக் கோவையானது அவருக்கு எதிரான அல்லது இன்றை வரையான சிறிலங்காவின் போர்க்கால கட்டளைத் தளபதிக்கு எதிரான மிகவும் விரிவான ஆதாரங்களைக் கொண்டுள்ளது.

ஆவணக் கோவையின் சுருக்கம் பின்வருமாறு,

சவேந்திர சில்வா பற்றிய இந்த ஆவணக் கோவையானது 2008 – 9 ஆண்டுகளில் அவர் கட்டளைத் தளபதியாக இருந்த 58 ஆவது படைப்பிரிவு சிறிலங்காவின் வடக்கில் உள்ள தொடர் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களை விபரிக்கின்றது. அந்த தாக்குதல்கள்

– பொதுமக்கள் மீது வேண்டுமென்றும் கண்மூடித்தனமாகவும் நடாத்தப்பட்ட தாக்குதல்கள்

– வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள்

– பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்கள்

– தடைசெய்யப்பட்ட மற்றும் கண்மூடித்தனமான ஆயுதப்பாவனை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

கட்டளைப் பொறுப்பு

அனைத்துலக சட்டத்தின் கீழ் சவேந்திர சில்வா போன்ற கட்டளைத் தளபதி பின்வருவனவற்றுக்கு நேரடியாக பொறுப்புடையவராவார்:

– சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தனக்கு கீழ் இருந்தவர்களுக்கு கட்டளை வழங்கியமை

– சட்டத்திற்குப் புறப்பான நடவடிக்கைகள் அவருக்கு கீழ் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியமை (அவர் அவற்றுக்கு கட்டளையிட்டாரோ இல்லையோ)

சில்வா அனைத்துலக சட்டங்கள் பற்றி இராணுவ வீரர்களுக்கு படிப்பித்து வருவதாக இராணுவம் தெரிவிக்கின்றது. ஆகையால் இது பற்றி அவருக்கு தெரிய வேண்டும்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்

இந்த ஆவணக் கோவை பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஒரு வகையான அழிவாகவே பார்க்கின்றது. பொதுமக்கள் மீது எவ்வாறான போர் நடத்தப்பட்டது என்பதை தெளிவாக காட்டக்கூடிய ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளன. அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தற்காலிக வைத்தியசாலைகள் உள்ளான போது ஏற்பட்ட முற்றிலும் பயங்கரமான காட்சிகளை அதனை நேரில் கண்ட சாட்சிகள் விபரிக்கின்றனர்:

அது கூச்சல் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.அதனை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அழுது கொண்டும் கூச்சலிட்டபடியும் பெற்றோர்கள் தமது காயப்பட்ட பிள்ளைகளை இங்கும் அங்கும் பதற்றத்துடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பிள்ளைகள் படுகாயமடைந்திருந்தார்கள். சிலரது அரைவாசி துண்டிக்கப்பட்ட அபயவங்கள் அவர்களின் உடலில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது.”

2009 ஆண்டு இடம்பெற்ற போரில் உயிர் பிழைத்த தமிழர்கள் பத்தாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் பயங்கரக் கனவுகளாலும் மனவடுவினாலும் இறப்புகள் பற்றி அடிக்கடி வரும் நினைவுகளாலும் இன்னமும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை ஒன்றினுடைய தலை தனக்கு அருகில் வந்து விழுந்ததாக ஒருவர் விபரிக்கின்றார். மற்றவர் தொங்கிக் கொண்டிருந்த தனது குடலைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றதாக ஞாபகப்படுத்துகின்றார்.

சிலர் பாதுகாப்பிற்காக பதுங்குகுழி வெட்ட முயன்ற போது அங்கு அழுகிய உடல்கள் வருவதைக் கண்டார்கள். வேறு சிலர் இரத்த வெள்ளத்தின் மீது வெறுங்காலுடன் ஓடியதாக கூறுகிறார்கள். தமது அன்புக்குரியவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது கூட தெரியாமல் அவர்களை பதுங்குகுழிகளுக்குள் கொண்டு செல்வதை அடிக்கடி பார்த்தாக அவர்கள் விபரிக்கின்றார்கள்.

போரில் தப்பி பிழைத்தவர்களின் மனதில் இப்பொழுதும் பயங்கரமான சம்பவங்கள் பற்றிய நினைவுகள் தொடர்ந்தும் உள்ளன. இவர்களில் பலர் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

“ஒரு குடும்பத்தில் ஒரு 18 மாதப்பிள்ளையும் அவனுடைய தகப்பனாரையும் தவிர அனைவருமே இறந்தார்கள். இருவரும் தலையில் காயமடைந்தார்கள் அந்த ஆண்பிள்ளை மிகவும் பசியுடன் இருந்தது. அவனுடைய தலையிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியவில்லை அத்துடன் அவன் மிகவும் பசியுடன் இருந்தமையால் தன்னுடைய தலைக் காயத்தால் ஏற்பட்ட வலி மற்றும் இரத்தம் போன்றவற்றைக் கவனிக்காமல் தன்னுடைய பெருவிரலை சூப்பிக் கொண்டிருந்தான் என்று நான் நினைக்கின்றேன்.”

கிளிநொச்சி தாக்குதல்கள்

கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட வேளையிலும் அது மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உட்பட்ட வேளையிலும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். சவேந்திர சில்வா பொதுமக்கள் இழப்புகள் ஏற்படும் வகையில் வைத்தியசாலை மற்றும் ஐ நாவின் கட்டிடங்கள் போன்ற பொதுமக்கள் இலக்குகள் மீது வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொள்வதற்கு கட்டளையிட்டார் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

புதுக்குடியிருப்பு தாக்குதல்கள்

சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படையணி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டிருந்தது. அரசாங்கத்துடன் தொடர்பில் இருந்தமையால் அவருக்கு வைத்தியசாலையின் ஆள்கூற்று நிலை பற்றி தெரியும். அத்துடன் அந்தப் பிரதேசத்தை நோட்டமிட்ட ஆளில்லா வேவுவிமானங்கள் மற்றும் ட்ரோன் போன்றவற்றுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.

ஐ நா அதிகாரிகள் வைத்தியசாலை தாக்குதலுக்கு உள்ளாவதாக பலமுறைகள் சிறிலங்கா இராணுவத்திற்கு அறிவித்திருந்தமையால் மேஜர் ஜெனரல் சில்வாவிற்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை குண்டுத் தாக்குதலுக்கும் எறிகணைத்தாக்குதலுக்கும் உள்ளாகி வந்தமை அவருக்கு நன்றாக தெரியும் என்பதை நம்புவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளன.

தனக்கு கீழ் இருந்தவர்கள் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை பாரியளவில் மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது மேஜர் ஜெனரல் சில்வாவிற்கு தெரியும் அல்லது தெரிந்திருக்க வேண்டும்.

அத்துடன் தான் கட்டளைத் தளபதியாக இருந்தும் அவருடைய சக்திக்கு உட்பட்டதாக இருந்தும் கூட அவர் அந்த தாக்குதல்களை நிறுத்தவில்லை.

பொக்கணைத் தாக்குதல்கள்

சவேந்திர சில்வாவின் முழுமையான கட்டளையின் கீழ் இருந்த படையினர் பொக்கணையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட நேரத்தில் கண்மூடித்தனமாக மற்றும் வேண்டுமேன்றே பொதுமக்கள் மீது தாக்குதல்களையும் நடத்தினார்கள். இதில் பால் மா வழங்கும் நிலையம் மீதான தாக்குதலும் உள்ளடங்கும். இதில் பொதுமக்களுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. பல பெண்கள்இ பிள்ளைகள் கொல்லப்பட்டும் காயத்திற்கும் உள்ளானார்கள்.

தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொண்டு வருவதும் அத்துடன் பொதுமக்கள் மத்தியில் இறப்பு மற்றும் காயம் ஏற்படும் வகையில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது பற்றி சில்வாவிற்கு தெரியும் அல்லது தெரிந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. என்பதனை நம்புவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.

இந்த தாக்குதல்கள் குறிப்பிட்ட நீண்ட காலப்பகுதியில் திரும்பத் திரும்ப இடம்பெற்றன அத்துடன் முன்னைய தாக்குதல்கள் பற்றிய தகவல் அவரைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

புதுமாத்தளன் தாக்குதல்கள்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தலைமை தாங்கிச் சென்றார் அத்துடன் அவரின் கட்டளையின் கீழ் இருந்த படையினரே வைத்தியசாலையையும் கைப்பற்றினார்கள் என்பதனை இந்த அறிக்கையிலுள்ள ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. வைத்தியசாலைப் பகுதி உட்பட்ட புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே திட்டமிட்டு கட்டளையிட்டதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த தாக்குதல்களில் வைத்தியசாலையிலும் அதனை சுற்றிய பகுதியிலும் பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன.

வைத்தியசாலையானது பல தடவைகள் தாக்குதல்களுக்கு இலக்கானமையால் பொதுமக்கள் இலக்கினைத் தாக்கும் நோக்கத்துடனான தாக்குதல்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே கட்டளையிட்டார் என்பதை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனைவிட புதுமாத்தளனில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை என்பதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

வலைஞர்மடம் தாக்குதல்கள்

சவேந்திர சில்வாவின் படையினர் வலைஞர்மடத்திலுள்ள வைத்தியசாலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருந்ததனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டதுடன் கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டன. 58 ஆவது படைப்பிரிவு உட்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைகள் டாங்கிகள் மற்றும் கொத்துக்குண்டுகளை கண்மூடித்தனமான வழிகள் மற்றும் போர் முறைகளிலும் பயன்படுத்தினார்கள்.

மேஜர் ஜெனரல் சில்வாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் வேண்டுமென்றே வலைஞர்மடத்திலிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனதான தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள் என்பதனை அவர் அறிந்திருக்க வேண்டும் என்பதை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

முள்ளிவாய்க்கால் தாக்குதல்கள்

மேஜர் ஜெனரல் சில்வாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் வேண்டுமென்றே முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள் அத்துடன் பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனதான தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள் என்பது அவருக்கு தெரியும் அல்லது அறிந்திருக்க சந்தர்ப்பம் உண்டு என்பதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

மேலும்அவர் “தரைப்படையினரை நேரடியாக வழிநடத்திச் சென்றமையால்”; அவர் அந்தப் பிரதேசத்தில் இருந்தார் அத்துடன் அப்போது பாதுகாப்பு வலயம் – 32 சதுர கிலோமீற்றர்களைக் கொண்டதாக இருந்தமையால் அவர் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் பார்த்திருக்க வேண்டும் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தன்னுடைய கட்டளையின் கீழ் இருந்தவர்களில் இவற்றுக்கு பொறுப்பானவர்களை அவர் தண்டித்தார் அல்லது இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார் என்பதை உறுத்திப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சரணடைவுகள்

வட்டுவாகல் பாலத்தடியில் இடம்பெற்ற சரணடைவுகள் 58 ஆவது படையணியிடமே இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கின்றது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த கட்டளைகளுக்கும் பொறுப்பாக இருந்தாக கூறும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் கைகுலுக்கி கொண்டார்.

அவர்களுடைய இறந்த உடல்கள் கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் வட்டுவாகல் பாலத்திற்கு மற்றைய பக்கத்தில் இருந்த வீதியோரத்தில் காணப்பட்டன என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் இனால் செவ்வி காணப்பட்ட நேரடிச் சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

அவர் அங்கு பிரசன்னமாகியிருந்ததையும் அந்தப் பகுதிக்கு கட்டளை வழங்கியதையும் கருத்திற் கொண்டு அவருடைய பொறுப்பின் கீழ் இருந்த படையினரே சரணடைந்தவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் மற்றும் அவர்களில் சிலர் உடனடியாக படுகொலை செய்யப்பட்டமைக்கும் பொறுப்பு என்பது அவருக்கு தெரியும் அல்லது அதனை தெளிவாக காட்டும் தகவல்களை வேண்டுமென்றே கவனத்தில் எடுக்காமல் விட்டார் என்பதை நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.

பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய வடிவிலான பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதை

சித்திரவதையினை மேற்கொள்வதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அனுமதி வழங்கினார் என சித்திரவதை செய்யப்பட்ட சாட்சியொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சிறிலங்கா பற்றிய அதிகாரபூர்வ விசாரணை அறிக்கை மற்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினர் சித்திரவதையில் ஈடுபட்டமை மற்றும் அவர் இந்த வன்முறைகளை தடுக்க தவறியதுடன் அதற்குப் பொறுப்பானவர்களையும் தண்டிக்க தவறிவிட்டார் என்பதால் அவருக்கு இது பற்றி தெரியும் அல்லது தெரிந்திருக்க சந்தர்ப்பம் இருந்தது என்பதை நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறே இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சிறிலங்கா பற்றிய உத்தியோகபூர்வ விசாரணையின் கண்டிபிடிப்புக்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றஇ பாலியல் வன்முறைஇ சித்திரவதை மற்றும் அவமானப்படுத்துதல்கள் போன்றவற்றுக்கும் அத்துடன் சித்திரவதை ஒரு தனியான குற்றமாகவும் சவேந்திர சில்வா குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க முடியும். அத்துடன் எதிர்நோக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

Print Friendly