SHARE

கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களின் உள்ளவர்களின் விபரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர். 

குறித்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள் , நிறுவனங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை சிவில் உடைகளில் சென்றவர்கள் தம்மை பொலிசார் என அடையாளப்படுத்தி , குடும்ப விபரங்களை கோரும் படிவங்களை உரிமையார்களிடம் கையளித்து அதனை நிரப்பி தருமாறு கோரி படிவங்களை நிரப்பி எடுத்து சென்றுள்ளனர். 

சில வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இல்லை என கூறப்பட்ட போது வீட்டு உரிமையாளர் வந்ததும் இந்த படிவங்களை நிரப்பி இன்று வியாழக்கிழமை மாலைக்குள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் படிவங்களை ஒப்படைக்க வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறி சென்றுள்ளனர்/ 

இதவேளை சில வீட்டு உரிமையாளர்கள் எதற்காக விபரங்களை கோருகின்றீர்கள் என பொலிசாரிடம் கேட்ட போது தமக்கு எதுவும் தெரியாது எனவும் கொழும்பில் இருந்து இந்த படிவம் வந்தது , அவர்களின் உத்தரவின் பேரில் தான் தாம் விபரங்களை கோருவதாக சிவில் உடையில் தம்மை பொலிசார் என அடையாளப்படுத்திய நபர்கள் கூறியுள்ளனர். 

வீட்டு உரிமையார்களிடம் விபரம் சேகரிக்க கொடுக்க ப்பட்ட விண்ணப்ப படிவத்தில் ” குடியிருப்பாளர் விபர அட்டவணை – பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76ஆம் பிரிவின் கீழ் செய்யப்படும் கூற்று ” என உள்ளது. 

பொலிசார் திடீரென இன்றைய தினம் சிவில் உடையில் குடும்ப விபரம் சேகரிப்பது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .

Print Friendly, PDF & Email