SHARE

போதைப்பொருள் வியாபாரிகள் பற்றி தகவல் தந்தமைக்காக கிளிநொச்சியில் பாடசாலை மாணவன் தாக்கப்படவில்லையெனவும் அதுவொரு விபத்து எனவும் இலங்கை காவல்துறை விளக்களித்துள்ளது.

அதனால் கஞ்சா கடத்தல், ஆவாக்குழு தொடர்பில் பொதுமக்கள் எந்தப் பயமுமின்றி தகவல்கள் வழங்க முடியுமென வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தெரிவித்துள்ளதுடன் பொது மக்கள் வழங்கும் தகவல்கள் பாதுகாக்கப்படுமென்றும், அவ்வாறு இரகசிய தகவல்கள் வழங்கவிரும்பும் பொது மக்கள் தனது தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியுமெனவும் அறிவித்துள்ளார்.

காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய சிறுவனை தாக்கயமை தொடர்பில் கேட்ட போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஞ்சா கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் தேவையான தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியும். தகவல் வழங்குவது தொடர்பாக இரகசியம் பேணப்படும் தகவல் தருபவர்கள் தொடர்பில் யாருக்கும் செல்லமாட்டோம்.

வேறு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், அந்தப் பிரச்சினைகளை நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம் என்றார்.

கிளிநொச்சி சம்பவம் தொடர்பாக பரிசீலணை செய்த போது, அந்த சிறுவன் சைக்கிளில் ஓடிப் போனபோது, மோட்டார் சைக்கிள் வருவதை அவதானிக்காமல் சென்றமையினால், விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் வழங்கியமைக்காக சிறுவன் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த மாணவன் கஞ்சா தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன் இன்றைய தினம் இதனை கண்டித்து கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.     

Print Friendly, PDF & Email