SHARE

லண்டன் வாழ் தமிழர்கள் மீது பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் அதிகாரிகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் இன்று நடைபெற்ற சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தூதரகத்தின் உள்ளிருந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்து தமிழர்களை தனது கமராவில் வீடியோபதிவு செய்ததுடன் அவர்களுடன் மிரட்டும் தொனியில் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வருடம் இதே போன்று சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆர்பாட்டக்காரர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான பிரியங்கா பெர்னாண்டோ மிரட்டல் விடுத்திருந்தார்.

இது குறித்த வழக்கு விசாரணையும் லண்டனில் வெஸ்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இதில் பிரியங்கா பெர்னாண்டோ மீதான இரு குற்றச்சாட்டுக்களும் நீதி மன்றில் நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின எதிர்ப்பாட்டத்தின் போதும் மீண்டும் இலங்கை தூதரகத்தின் ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டுள்ளார்.

பிரித்தானிய பொலிஸார் வரையறுத்த எல்லைகளுக்குள் நின்றபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளிப்படுத்திக்கொண்டிருந்த வேளை தூதரகத்தின் உள்ளிருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த குறித்த பெண் ஊழியர் தனது கைபேசி கமராவில் ஆர்ப்பாட்டக்காரர்களை வீடியோ பதிவு செய்தார்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரது செயல் குறித்து விசனம் தெரிவித்தவேளை மிகவும் கோபம் அடைந்தவராய் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுடன் மிரட்டும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

இதேவேளை தூதரகத்திலிருந்து வெளியில் வந்த ஏனைய அதிகாரிகளும் ஊழியர்களும் தங்களது கைபேசிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களை படம் பிடித்து அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினர் புலம்பெயர் தமிழர்களை மிரட்டும் நிலை இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை உலகத்தமிழர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி வீடியோவுடன்..

Print Friendly, PDF & Email