SHARE

பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு விவகார அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ இலங்கைக்கு தப்பி சென்ற விடயத்தில் பிரித்தானிய அரசாங்கத்தின் பங்கு தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

போஸ்ட்மவுத் தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் மோர்கன் (Stephen Morgan) வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளரிடம் மேற்படி கேள்வியை எழுப்பியிருந்தார்.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் மேற்படி கேள்வியை எழுப்பிய எம்.பி. ஸ்டீபன் மோர்கன்இ பிரியங்கா பெரர்ணான்டோவின் நடத்தை தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகத்துடன் வெளியுறவுத்துறை எவ்வாறான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தது எனவும் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளித்த பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பிராந்தியங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட்

குறித்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் 2018 ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதியன்று நான் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவை தொடர்பு கொண்டேன். இதனையடுத்தே பிரியங்க பெர்ணான்டோ அவர்களது நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டார்.

இதனிடையே பிரியங்கா பெர்னாண்டோவின் இராஜதந்திர நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காக வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றிற்கு பொதுநலவாய விடயங்களுக்கான அலுவலகம் அவர் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றிற்கு வழங்கியது.

அதேவேளை கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதியன்று இலங்கையின் வெளியுறவுத்துறை செயலரின் வேண்டுகோளுககிணங்க அவரை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார். இதன் போது பிரியங்கா பெர்னாண்டோவின் இராஜதந்திர விதிவிலக்கு தொடர்பாக இலங்கை அரசின் கருத்தை வெளியுறவுத்துறை செயலர் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

மேலும் வியன்னா உடன்படிக்கையின் படி இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான ஒழுங்குகளிற்கு பிரித்தானியா உடன்படுகிறது எனவும் மார்க் பீல்ட் பதிலளித்தார்.

கொலை மிரட்டல் விடுத்த பிரியங்கா பெர்னான்டோக்கு எதிராக இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான இரு குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றினால் கடந்த ஜனவரி மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அவர்களின் வழிப்படுத்தலில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் அடுத்தகட்ட அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email