SHARE

கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சட்டை அணிந்தோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கூடி கதைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றைய தினம் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தப்பட்டது. குறித்த போராட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் , யாழ்.பல்கலைகழக மாணவர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை பிடுங்கி எறிந்தும் , ஊடகவியலாளர்கள் , போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் அச்சுறுத்தியும் இருந்தனர். 

அவ்வாறாக குழப்பத்தில் ஈடுபட்ட நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்கள் எனவும் , இவ்வாறே தமது போராட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் கவலை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் , போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய கறுப்பு சட்டை அணிந்த நபர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

அதேவேளை, போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முதலே அக் கலந்துரையாடல் நடந்தப்பட்டதாகவும் , அதன் பின்னரே குறித்த நபர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதாகவும் கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன. 

Print Friendly, PDF & Email