SHARE

பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிகாரை உடனடியாக பதவி நீக்குமாறு பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து அந்நாட்டு அரசிக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்த இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ மற்றும் யுத்தக்குற்றவாளிகளான இனம் காணப்பட்ட இராணுவ அதிகாரிகளை சந்தித்ததுடன் பாராட்டு நிகழ்வுகளையும் நடத்தியிருந்த நிலையிலேயே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதே வேளை குறித்த விஜயத்தின் போது ஹரோ மேயருக்குரிய உத்தியோக பூர்வ சீருடை அணிந்திருந்த நிலையிலேயே அவர் இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க சர்ச்சைக்குரிய பிரியங்கா பெர்னாண்டோ உட்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் இறுதிக்கட்ட போரில் திறமையாக செயற்படும் இராணுவத்தினருக்கு பாராட்டளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஹரோ நகரின் மேயர் பதவியிலிருந்து உடனடியாக விலக்கப்பட வேண்டும் என கோரி கையெழுத்து மனு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இணையவழி கையொப்ப மனு

https://www.change.org/p/sadiq-khan-the-resignation-of-councillor-kareema-marikar-as-mayor-of-harrow?signed=true

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியான ஹரோ நகரின் மேயராக உள்ள அவரது இந்த செயல் தமிழர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர் மீதான நம்பிக்கையற்ற தன்மையை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி கோரி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் இனப்படுகொலை புரிந்த இராணுவத்தினருக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை தமிழர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை இவ்வாறான மனநிலை உடைய இவர் எவ்வாறு அவரது நகராட்சிக்குள் வசிக்கும் தமிழர்களுக்கு நடுநிலையுடன் செயற்படுவார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சுமார் 28 வருடங்களாக வாழ்ந்து வரும் கரீமா மரிகார் கடந்த ஆண்டு மே மாதம் ஹரோ நகரின் மேயராக தெரிவு செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டு முதல் அவர் அந் நகர சபையை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email