SHARE

தமிழ் இளையோரின் கோரிக்கையை பிரித்தானிய பிரமருக்கு தெரிவிப்பதாகவும் உறுதி

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து பத்து ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூர யுத்தக்குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் இன்னும் முன்னேற்றம் ஏற்படாமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் திரேசா வில்லியர்ஸ் விசனம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ் இளையோருடனான நேற்றைய சந்திப்பின் பின்னர் தனது உத்தியோக பூர்வ முகப்புத்தகத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் கோருவதாக அவர்களுக்கு தான் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக்குற்றங்களிற்கு நீதியை வழங்க வலியுறுத்தக்கோரி பிரித்தானியாவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழ் இளையோர் நேற்றைய தினம் Barnet தொகுதியின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திரேசா வில்லியர்ஸை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்தனர்.

நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் உமாரஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக்குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு ஆகியவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையிலேயே, இக்கலந்துரையாடலின் பின்னர் குறித்த குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் திரேசா வில்லியர்ஸ் எம்.பி. பதிவு ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அங்கத்தவர்களின் குழுவினரை வரவேற்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் யுத்தக்குற்றம் தொடர்பில் இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை, அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் அவர்கள் எவ்வாறான உறுதிப்பாட்டுடன் உள்ளனர் என்பதை தன்னால் சொல்லமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் தமிழர்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்களிற்கு இன்னும் நீதி வழங்கப்படாமை அதில் முன்னேற்றம் ஏற்படாமை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பிரதமருடன் இது தொடர்பில் பேசுவேன் எனவும் குழுவினருக்கு உறுதியளித்தாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email