SHARE

இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவரது அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு பிழையானது எனது தெரிவித்துள்ள பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அவரது வழக்கை மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டவாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அருண் கணநாதன் என்பவரினால் முன்னெடுத்து செல்லப்பட்ட கே.வி. என்ற ஈழத்தமிழரின் வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு சமர்ப்பிக்கும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையிலேயே மனித உரிமை மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தம் மீது குற்றம் சுமத்துவதுடன் எதிராக நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகின்றன என்ற இலங்கை அரசின் மறுப்பு தவிடுபொடியானதுடன் இத் தீர்ப்பினையடுத்து இலங்கையில் ஈழத்தமிழர்கள் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற உண்மையும் நிரூபனமானது.

அதேவேளை, பிரித்தானியாவில் அகதித் தஞ்ச கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சாதகமான தீர்பாகவும் இது மாறியுள்ளது.

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரிய ஈழத்தமிழரான கே.வி. என்பவரது கோரிக்கை பிரித்தானியாவின் குடிவரவுத் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த நிராகரிப்பு எதிராக அவர் கீழ்; நீதிமன்றில் தொடர்ந்த வழக்கும் நிராரிக்கப்பட்டது.

இந்த வழக்குகளின் போது குறித்த நபர் தான் இலங்கையில் 2009 முதல் 2011 வரை இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அதற்கான மருத்துவ சான்று அறிக்கைகளையும் ஆதாரமாக சமர்ப்பித்திருந்தார்.

ஆயினும் குறித்த ஆதாரங்கள் அவர் உண்மையிலே சித்திரவதை செய்யப்பட்டவர் என்பதை காண்பிக்கவில்லை எனவும் அவரது உடலிலுள்ள காயங்களை தனக்கே தான் ஏற்படுத்திக் கொண்ட பின் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் எனவும் கீழ் நீதிமன்றங்கள் முடிவை அறிவித்திருந்தன.

பின்னர் இந்த தீர்ப்பு எதிராக குறித்த நபர் மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த போதும் அதிலும் அவர் தோல்வி கண்டிருந்தார்.

இந்நிலையிலேயே கே.பி. என்பவரின் குறித்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய சட்டவாளர் அருண் கணநாதன் மேல் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றில் வழக்கினை தொடர்ந்தார்.

அந்தவகையில் உச்ச நீதிமன்றில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி ஹேல் உட்பட மூத்த நீதிபதிகள் ஐவர் இன்று மேற்படி தீர்பினை வழங்கியுள்ளனர்.

அதில் குறித்த மனுதாரர் தனக்கே தான் காயங்களை ஏற்படுத்திக் கொண்டார் என்று சொல்வதற்குரிய எதுவித ஆதாரங்களும் இல்லை மாறாக, அவர் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளக்கப்பட்டார் காயங்கள் உள்ளன என்பதற்கான ஆதராங்களையே சமர்ப்பித்துள்ளார். அதனால் அவருடைய வழக்கு நீதிமன்றில் மீள் விசாரணை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பளித்து கீழ் நீதிமன்றிற்கு குறித்த வழக்கை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை அதன் கீழ் உள்ள நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளமையினால் குறித்த வழக்கின் மீதான உச்ச நீதிமன்றின் திர்ப்பினால் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அகதி அந்தஸ்து கோருபவர்கள் பெரும் வரப்பிரசாதத்தை பெற்றுள்ளனர்.

Print Friendly, PDF & Email