SHARE

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்

மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை, 1499 ஆம் ஆண்டுக்கும், 1719 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டவை என்று தெரியவந்தது.

எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூற முடியாது. அதேவேளை,  மன்னார் புதைகுழியின் முக்கியத்துவம் கருதி, இரண்டாவது ஆய்வு ஒன்றை மேற்கொள்வது முக்கியம்.

முன்னதாக, திருக்கேதீஸ்வரத்தில் 96  எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை புழங்காலத்தை சேர்ந்தவை என்று தொல்பொருள் திணைக்களம் கூறியிருந்தது.

இப்போது மன்னார் புதைகுழியையும் பழங்காலத்தைச் சேர்ந்தது என்று அமெரிக்க ஆய்வு கூறியுள்ளது.

புளொரிடாவில் உள்ள ஆய்வகம், எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபடவில்லை.  எனவே, எப்படி அந்தப் புதைகுழி வந்தது என்பதை கண்டறியும் வகையில்,  மேலதிக ஆய்வு நடத்தப்பட  வேண்டும்.

போரின் போது பெருமளவு மக்கள் காணாமல் போயுள்ளனர். எனவே மனிதப் புதைகுழி அகழ்வை விரிவுபடுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். புதைகுழி அகழ்வு மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதை கூட்டமைப்பு வலியுறுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email