SHARE

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னிட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை குழப்பும் வகையில் செயல்பட்ட இலங்கை தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவரால் நீதிமன்ற முன்றலில் பதட்ட நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக குரலை உயர்த்தி ஆக்ரோசமாக வார்த்தைகளை கொட்டித்தீர்த்த அவர் தமிழர்கள் இனத்துவேசம் பிடித்தவர்கள் என கத்தியதுடன் இனவாதத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த ஆண்டு லண்டனின் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்த இலங்கை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.

இதன் போது பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றின் முன்றலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே மேற்படி வழக்கினை அவதானிக்க வந்திருந்த வினோமா என அறியப்படும் இலங்கை தூதரகத்தின் குறித்த பெண் ஊழியர் நீதிமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது இனத்துவேசத்தை தூண்டும் வார்த்தைகளை கொட்டித்தீர்த்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிரட்டல்களையும் விடுத்தார்.

வழக்கு விசாரணைகளின் முடிவில் நீதிமன்றின் உள்ளே இருந்த படி வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அவதானித்துக்கொண்டிருந்த வினோமா, வெளியே வந்ததும் ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து இனவாதத்தை தூண்டும் வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டல்களும் விடுத்தார்.
புரித்தானியாவில் நீதிமன்ற முன்றலிலேயே இலங்கை தூதரகத்தின் ஊழியர் ஒருவர் தமிழர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதவேளை, இலங்கை தூதரகத்தின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்ட மேலும் இருவர் இன்று நீதிமன்றிற்கு வந்திருந்ததுடன் அதில் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் தமிழ் தரப்பினரை படம் பிடித்தமை அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரிடம் இதுகுறித்து முறையிட்ட போது அவரது கையடக்கத் தொலைபேசி பரிசீலிக்கப்பட்டதுடன் அதிலிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டன. பின்னர் வழக்கு விசாரணையின் இரண்டாவது அமர்வின் போது நீதிபதியின் கவனத்திற்கு இது கொண்டு வரப்பட்டதுடன் இலங்கை தூதரகத்தை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஊழவு பார்ப்பதாகவும் சாட்சிகளை அடையாளம் காணுவதாகவும் வழக்கறிஞரால் நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

இதனையடுத்து, குறித்த செயலிற்கு எதிராக கடும் விசனம் வெளிட்ட நீதிபதி நீதிமன்ற கட்டடத்தினுள் புகைப்படம் எடுப்பது பாரதூர குற்றம் எனவும் எச்சரித்தார்.

Print Friendly, PDF & Email