SHARE

கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை காரணமாக தாண்டிக்குளத்தில் இருந்து இரட்டை பெரியகுளம் பகுதிக்கு இடம்மாறியது. 

இந் நிலையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி எம்.பிக்களும் இணைந்து பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடைத்தொகுதிகளை வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு 12 ஆயிரம் ரூபா மாத வாடகைக்கு வழங்குவதெனவும் மிகுதிக்கடைகளை கேள்விக்கோரலுக்கு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

என்றாலும் தற்போது இதற்கான கேள்விக்கோரல் கொழும்பில் விடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப்பெற , நேர்முகத்தேர்வுக்கு தோற்ற கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வை ஏன் வவுனியாவில் செய்ய முடியாது? அதனால் இந்நடவடிக்கைகளை  வவுனியா மாவட்ட செயலகத்துக்குக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Print Friendly, PDF & Email