SHARE

தமிழ் செயற்பாட்டாளரும் தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனருமான காலஞ்சென்ற திரு வைரமுத்து வரதகுமாரின் இறுதி ஊர்வலம் லண்டனிலுள்ள அனைத்தின மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.

பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரின் இரங்கல் செய்தி நாடமாளுமன்ற உறுப்பினரின் அஞ்சலி உரை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தி, மனித உரிமை செயற்பாட்டாளர்களின் நினைவுரைகள் அரங்கு நிறைந்த பெருந்திரளான மக்களின் அஞ்சலி வணக்கம் என ஆளுமை மிக்க மனிதர் திரு.வரதகுமாரின் இறுதி நிகழ்வு சோகமயமாகியது.

தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனரும் நீண்டகால தமிழ் செயற்பாட்டாளருமான திரு.வைரமுத்து வரதகுமார் கடந்த 13 ஆம் திகதி சுகவீனம் காரணமாக காலமானார்.

இந்நிலையில் லண்டன் Newmalden KT3 5PE எனும் முகவரியில் அமைந்துள்ள Richard Chalenor School மண்டபத்தில் TIC உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இன்று (24) அவருக்கான இறுதிக்கிரியைகள் நடைபெற்றதுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

காலை 7.00 மணியளவில் இறுதி கிரியைகள் ஆரம்பமானதுடன் அதனைத்தொடர்ந்து அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் கல்வியாளர்கள் வேற்றின மக்கள் என அரங்கு நிறைந்த பெருமளவிலானோர் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

தமிழ் பேசும் மக்களின் மீட்சிக்காக தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயலாற்றி வந்த வரதகுமார் தனது ஆளுமையினால் எவ்வாறான பணிகளை செய்துள்ளார் அவை எங்கெல்லாம் சென்றடைந்துள்ளது என்பதை இன்றை இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட மக்கள் திரள் சாட்சிபகிர்ந்துள்ளது.

இந்நிலையில் இறுதிகிரியைகளைத் தொடர்ந்து நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோபன் மற்றும் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமார் ஆகியோர் அனுப்பி வைத்த இரங்கல் செய்திகள் வாசிக்கப்பட்டது.

அதேவேளை இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் திரு வரதகுமாரின் ஆளுமை பற்றியும் அவரது செயற்பாடுகள் பற்றியும் கனத்த இதயத்துடன் தமது நினைவுகளை பகிர்தனர்.

வரதகுமார் அமைதியாகவே பெரும் செயல்களை செய்து முடிக்கும் ஆளுமை மிக்கவர் என்பதை தான் நன்கு அறிவதாக தெரிவித்த எட் டேவி இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனைக்கு எதிராக அவர் TIC ஊடாக எடுத்த நகர்வில் அதனை அறிந்து கொண்டேன் என தெரிவித்தார்.

அஞ்சலி நிகழ்வுகளையடுத்து வுஐஊ உறுப்பினர்களின் அணிவகுப்புடன் திரு.வரதகுமாரின் பூதவுடன் தாங்கிய பேழை மண்டபத்திலிருந்து வாயில்வரை எடுத்துச்செல்லப்பட்டதுடன் பின்னர் Putney Vale சேமக்காலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் பேசும் மக்களின் போரியல் வாழ்வில் பங்களிப்பு நிறைந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டு வந்த திரு.வைரமுத்து வரதகுமார் பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் TIC யின் இயக்குநராக இறுதிவரை செயற்பட்டு அதனூடாக தன் அளப்பெரும் பணிகளை தொடர்ந்து வந்தார்.

யுத்தத்தின் பின்னர் குழப்பமான மனநிலை கொண்டுள்ள தமிழ் சமூகத்தை அதிலிருந்து எவ்வாறு மீட்டு வருவது என்பதே அவரது நாளாந்த சிந்தனையும் செயலாகவும் இருந்தது.

சொல்லினைத் தவிர செயலே மேன்மையானது என்பதன் மொத்த உருவமாக இயங்கிக்கொண்டிருந்த ரைவரமுத்து வரதகுமார் என்னும் அற்புத செயல் வீரனை தமிழ் சமூகம் இன்று இழந்துள்ளது.

Print Friendly, PDF & Email