SHARE

ப.சுகிர்தன்

தமிழரின் வரலாறு, பாரம்பரியம், மற்றும் மரபு ஆகியவற்றையும் தமிழர்களுக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையையும் வெளிக்கொணரும் வகையில் இலங்கைத் தமிழர்கள் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் மாபெரும் கண்காட்சி பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் நீண்டதொரு திட்ட நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இக் கண்காட்சியானது முள்ளிவாய்க்கால் தினமான எதிர்வரும் மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பிரித்தானியவின் Tolworth Recreation Centre எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இரு தினங்களும் முற்பகல் 11.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியானது பிரித்தானியாவில் நடைபெறும் ஏனைய முள்ளிவாய்க்காள் நினைவு நிகழ்வுகளை இடையூறு செய்யா வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தினால் நிகழ்த்தப்பட்ட கொடிய யுத்தம் முள்ளிவாய்காலுடன் முடிவடைந்து நடப்பாண்டுடன் 10 வருடங்களை எட்டியுள்ளது.

அந்த இறுதிக் கொடிய யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு அதிகமானோர் காயப்பட்டு அங்கவீனங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டதுடன் பலர் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இன்னும் பலர் இன்றுவரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் 10 வருட காலமாகியும் இதுவரை நடைபெற்ற அட்டூழியங்களுக்கும் உயிர் இழப்புக்களுக்கும் போர்க்குற்றங்களிற்கும் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கும் இலங்கை அரசு எவ்வித பொறுப்புக் கூறல்களையும் ஏற்கவில்லை.

பொறுப்புக் கூறல் தொடர்பில் ஐ.நா.வின் அழுத்தத்தையும் கால நீடிப்புக் கோரிக்கையால் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

இந்நிலையில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை கொளரவிக்கவும் தழிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை நினைவில் கொள்ளவும் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் எதிர்வரும் மே மாதம் 10 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து உழைத்து வரும் தமிழ் தகவல் நடுவம் இப் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தில் இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியத்தை தாங்கிய மாபெரும் கண்காட்சியை பிரித்தானியாவில் இரு நாட்களுக்கு நடாத்தவுள்ளது.

அண்மையில் அமரத்துவம் அடைந்த அவ்வமைப்பின் இயக்குனர் வரதகுமாரின் சிந்தனையிலும் அவரது ஆரம்பகட்ட திட்டமிடல்களுடனும் கருப்பெற்ற இக்கண்காட்சியானது இலங்கைத் தமிழர்களின் பண்டைய வரலாறு அரசியல் எதிர்ப்பு முரண்பாடுகளின் விளைவுகள் தமிழ் கலாச்சாரம் முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போர் ஆகிய தொனிப்பொருள்களின் கீழ் விரிவுபடுகிறது.

அந்தவகையில், இலங்கைத்தீவில் தமிழ் மொழியால் ஒன்றிணைந்துள்ள அனைத்து தரப்பினரின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் அரசியல் பண்பாடுகளை பிரதிபலிக்கும் படைப்புக்கள் இலக்கியங்கள் ஆராய்ச்சிகள் ஒளிப்படங்கள் ஆவணப்படங்கள் ஓவியங்கள் கார்ட்டூன்கள் மற்றும் கலைப்பொருட்கள் என்பன இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

தவிர, சமூக செயல்முறை பட்டறைகள் விரிவுரைகள் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்களிக்கக்கூடிய அம்சங்கள் ஆகியன இக்கண்காட்சியை மேலும் மெருகூட்ட உள்ளன.

முள்ளிவாய்க்கால்

இதனிடையே இக்கண்காட்சியின் பிரதான அம்சமாக முள்ளிவாய்க்கால் அமையவுள்ளது. முள்ளிவாய்க்காலில் நடந்த அனைத்தையும் பார்ப்பவர்கள் கண்முன்னே கொண்டுவரும் வகையில் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதானதொரு முள்ளிவாய்க்கால் சிறப்பு பீடம் இக் கண்காட்சியில் அமைகின்றது.

முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றையும் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளையும் இப்போது எம்மால் மாற்ற முடியாது. ஆனால் அங்கு நடந்த சம்பவங்களை எவ்வாறு நினைவு கூறலாம் என்பதையும் அதனை வெளி உலகம் எவ்வாறு நோக்குகின்றது என்பதையும் சரியான முறையில் மாற்றியமைக்க முடியும் என தமிழ் தகவல் நடுவம இதனூடு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பயங்கரவாதத்தை முறியடித்த போராக இலங்கை அரசினால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய விளக்கத்தை மாற்றவேண்டிய கடமையை உணர்ந்து தமிழ் தகவல் நடுவம் இக் காண்காட்சியினூடு அதற்கான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.

மேலும் முள்ளிவாய்க்காலை பிரதிபலிக்கும் நினைவுச் சின்னம் ஒன்றினையும் இக்கண்காட்சியில் வைக்கவுள்ளது. அதற்கான சிற்பவேலைகள் முள்ளிவாய்க்கால் களத்திலிருந்து ஓவியங்களை வரைந்த கலைஞன் மூலம் மேற்கொண்டு வருகிறார்கள். எனவே இது முள்ளிவாய்க்காலை தத்துருவமாக உயிரோட்டத்துடன் பிரதிபலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நினைவு நூல்

இக்கண்காட்சியில் இலங்கை தமிழர்கள் குறித்த நூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. முள்ளிவாய்க்கால் வரையான தமிழரின் வரலாறு, கலாச்சாரம், மரபு போன்ற விடயங்கள் அடங்கியதாக அமைகின்றது.

அதில் இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகள், சுய ஆட்சி மற்றும் அரசாங்கம் அகியவற்றை கேட்டதன் மூலம் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் வரலாறு கலாச்சாரம் அரசியல் இடப்பெயர்வுகள் போரினால் ஏற்பட்ட மன விரக்திகள் போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரமாண்ட ஏற்பாடுகளுடன் பிரித்தானியாவின் பிறக்கவுள்ள குழந்தையான இலங்கைத் தமிழர்கள் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் கண்காட்சி தனது காலடிகளை தமிழர் செறிந்து வாழும் புலம்பெயர் தேசங்களிற்கு எடுத்துவைக்கவுள்ளது.

பிரித்தானியாவில் இரு நாட்கள் நடைபெறும் கண்காட்சியினைத் தொடர்ந்து நடமாடும் கண்காட்சியாக மாற்றம் பெற்று பின்னர் புலம்பெயர் தேசங்களில் தமிழர் செறிந்து வாழும் நாடுகளான கனடா, சுவிஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.

அருங்காட்சியகத்திற்கான நகர்வு

இதேவேளை இப் பிரமாண்ட கண்காட்சியினூடு லண்டனில் அல்லதும் கனடாவில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் (Museum) ஒன்றினை அமைப்பதற்கான திட்டங்களைiயும் தமிழ் தகவல் நடுவம் எண்ணியுள்ளது.

லண்டன் மற்றும் பேர்லின் நகரங்கள் அமைந்துள்ள யூதர்களின் ஹொலொகோஸ்ட் அருங்காட்சியம் போல் இதுவும் அமையப்பெற வேண்டும். தமிழர்களின் வரலாறு அடையாளங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படவேண்டும்.

பல வருடங்களாக சிங்களப்பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு முகம் கொடுத்த மக்களை பல இழப்புக்களை தியாகங்களை செய்த அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் புலம்பெயர் தமிழ் சமூகம் இதனை செயல்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலேசனையை இதனூடாக தமிழ் தகவல் நடுவம் முன்வைக்கின்றது.

ஈற்றில் எல்லாமாக தமிழர் பாரம்பரியம் வரலாற்றை எடுத்துணர்த்தும் தமிழ் தகல் நடுவத்தின் இலங்கைத் தமிழர்கள் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் கண்காட்சி தமிழ் சமூகத்தின் மீண்டெழும் தன்மையையும் தாங்கு திறனையும் பிரதிபலிக்கு கண்காட்சியாக அமையும் என்பதில் எவ்வித ஐப்பாடும் இல்லை.

அதேவளை, இன்றைய இளைய தமிழ் சமுதாயத்தினரிடையே காணப்படும் தமிழர்களின் வரலாறு அடையாளம் போராட்டம் ஆகியவை பற்றிய தெளிவின்மையை அறிவுக்குறைவை நிவர்த்தி செய்யும் கண்காட்சியாகவும் இது அமையும் என்பது உறுதி.

Print Friendly, PDF & Email