SHARE

உயிர்த்த ஞாயிறு  தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய மதத்தலைவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், குறித்த சந்தேகநபரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.

இலங்கையில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை மொஹமட் சஹ்ரானுக்கு சந்தேகநபரான மதகுரு வழங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபரான மதகுருவை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை குண்டுத் தாக்குதலின் முக்கிய சந்தேகநபராகக் கருதப்படும் சஹ்ரான் வசித்த, மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியிலுள்ள வீட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று சோதனையிட்டனர்.

ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை. இருப்பினும் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சாய்ந்தமருது பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வீட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட இருவரும் மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email