SHARE

அமைதியான சகவாழ்விற்கான அடித்தளத்தை நிறுவ தவறியதால், இன்று இல்லையென்றாலும் எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “மக்கள் மனதைவிட்டு நீங்காத ஒரு சம்பவமாக ஏப்ரல் 21ஆம் திகதி சம்பவம் பதிவாகியுள்ளது. அடுத்தது என்ன என்பதே தற்போது அனைவரதும் கேள்வியாகக் காணப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வித வன்முறைகளும் இடம்பெறாத நிலையில், நாட்டில் அமைதி ஏற்பட்டுவிட்டது என்ற மெத்தனப் போக்கில் அனைவரும் இருந்துவிட்டோம்.

பத்து வருடங்களாக எவ்வித மோதல்களும் இடம்பெறாததால் நாடு அமைதியடைந்துவிட்டது என கருதினோம். ஆனால், அந்த நம்பிக்கை கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்துடன் இழக்கப்பட்டுவிட்டது.

அமைதியான சகவாழ்விற்கான அடித்தளத்தை நிறுவ நாம் தவறியுள்ளோம். இதனால், இன்று இல்லையென்றாலும் எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை நாம் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email