SHARE

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விடயங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது என நீதவான் ஏ.எஸ்.பி போல் இதன்போது தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினர், பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலில் மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் மீட்கப்பட்டன.

இந்த விடயம் குறித்து மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email