SHARE

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் குருநகர் சென். ஜேன்ம்ஸ் தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருவர் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்தது. சந்தேகநபர்கள் இருவரையும் விசாரணைக்குட்படுத்திய பொலிஸார், அவர்களை இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர்.

“சந்தேகநபர்களில் ஒருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். மற்றவர் புல்லோட்டைப்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் குருநகர் பகுதியிலுள்ள சென்.ஜேம்ஸ் தேவாலயத்துக்கு அண்மையில் சென்று மறைவான பகுதியில் நின்றனர். அதனை அவதானித்த மக்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் விசாரணையின் போது குருநகர்ப் பகுதிக்கு வந்ததற்கான தகுந்த காரணத்தைச் சொல்லவில்லை. அதனால் சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

“சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் மௌவியாக உள்ளார். மற்றையவர் யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்கின்றார். அவர்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டனர். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மன்றுரைத்தார்.

“சந்தேகநபர்கள் எவரும் தான் மௌவி என்று விசாரணையில் சொல்லவில்லை. அவர்கள் தமது வதிவிடம் தொடர்பான உறுதிப்படுத்தலை பொலிஸாரிடம் முன்வைக்கவில்லை” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Print Friendly, PDF & Email