SHARE

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவையும் மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரையிலேயே இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது. “கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் தடுக்கும் செயற்பாடாகவே இந்த கலவரம் அமைந்துள்ளது.

தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு நிலைமைகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே முயற்சி செய்து வருகின்றோம். ஆனால் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தி சில குழுக்கள் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதுவே வட மேல் மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான மோதல்களினால் நாட்டில் அமைதி நிலை ஏற்படாது. அத்தோடு பாதுகாப்புப் படையினரின் விசாரணைக்கு இதுபெரும் இடையூறாக அமைந்துவிடும்.

தற்போது வடமேல் மாகாணத்தில் பல பகுதிகளில் கடும் பதற்றநிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன இதனால் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. இருப்பினும் பொலிஸ் மற்றும் இராணுவம் அங்கு தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

பொதுமக்கள் வன்முறைக்கு செல்ல வேண்டாம், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவி செய்யவேண்டும். இதற்காவே நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு சட்டத்தை பாதுகாக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவையும் மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க படையினருக்கும் பொலிஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email