SHARE

நாட்டில் நடைபெறும் எந்தவொரு அசம்பாவித செயற்பாடுகளுக்கும் முன்னாள் போராளிகளைக் குற்றம் சுமத்துவதை அரசாங்கம் நிறுத்திகொள்ள வேண்டுமென தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே க.பிரபாகரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘‘நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் முன்னாள் போராளிகளை மாத்திரம் குற்றம் சாட்டுவதை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் நிறுத்திகொள்ள வேண்டும்.

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இவ்வாறான கொடூரமான செயற்பாடுகளை முன்னாள் போராளிகள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

இதேவேளை வவுணதீவுப் பொலிஸாரின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் எவ்வித குற்றமும் செய்யாத சூழலில் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரின் மனைவி இவரை விடுதலை செய்யக் கோரி வீதியில் போராட்டங்களை மேற்கொண்டார். ஆனால் எந்தவொரு அமைப்போ அரசியல்வாதிகளோ ஆதரவு தெரிவிக்கவில்லை.

தற்போது எவ்வித நிபந்தனையுமின்றி பரிபூரணமாக விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். இவர் மீது குற்றம் இல்லையென உறுதிப்படுத்தபட்ட பின்னரே பலரும் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கோரிக்கைள் முன்வைத்துள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரே இவ்விடயத்தில் நடவடிக்கை மேற்கொணடதாக கேள்விபட்டோம்.

ஆகையால் விடுதலையடைந்துள்ள அஜந்தன் மிகவும் சிரமத்தில் உள்ளமையால் அரசாங்கத்தில் இருந்து அவருக்கான இழப்பீட்டினையும் பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் சிறையில் இருக்கும் ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க வேண்டும்” என க.பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

Print Friendly, PDF & Email