SHARE

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரித்தானியாவின் தொழிற்கட்சி தொடர்ந்தும் உழைக்கும் என அக்கட்சியின் தலைவரும் பிரித்தானிய அரசின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின் உறுதியளித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றில் இன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நெருங்கும் நிலையில் பிரித்தானிய தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இனப்படுகொலை நினைவு ஒன்று கூடல் நடாத்தப்பட்டது.

பிரதான கட்டடத்தொகுதியின் 10 ஆவது கோட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் பங்கேற்று உரையாற்றினார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருந்த இனப்படுகொலைக்கும் அநீதிக்கும் 10 ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் நீதி வழங்கப்படாமல் இருப்பதனையிட்டு எனது கவலையைத்தெரிவிக்கிறேன். தமிழ் சமூகத்தினர் அதனால் அடையும் வேதனை குறித்து நன்கறிவேன்.

இந்நிலையில் தமிழர்களுக்கு நீதி கிட்டுவதற்காக எமது தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் என்பதனை உறுதியுடன் கூறுகிறேன் என அவர் தெரிவித்தார்.

இன்றைய நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் – நிழல் அமைச்சர்கள் உட்பட பல முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமிழர்களுக்காக குரல்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email