SHARE

அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2018 மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பலவீனமானவையாகவும் தவறான எண்ணத்தை தோற்றுவிப்பவையாகவும் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரத்தில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதெனும் எண்ணத்தை தோற்றுவிக்கக்கூடிய வகையில் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருக்கின்றது என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை குறித்து மனித உரிமைகள் அறிக்கையொன்றை அமெரிக்கா வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பாக தெரிவிக்கும்போதே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கடந்த வருடம் இலங்கையில் சில சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், அடாத்தான தடுப்புப் காவல், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படல் உட்பட பல அத்துமீறல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, போர்க்காலத்தில் உரிமை மீறல்களையும் துஷ்பிரயோகங்களையும் செய்தவர்கள் சட்டத்தில் சிக்காமல் இருக்கும் போக்கு இன்னமும் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க படைகள் அத்துமீறல்களை செய்துவிட்டு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக செயற்படுகின்ற போக்கு குறித்த உண்மை நிலை அந்த அறிக்கையில் குறைத்து கூறப்பட்டிருக்கின்றதென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை  சுட்டிக்காட்டியுள்ளது.

Print Friendly, PDF & Email