SHARE

அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால், நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “எமக்கான அரசியல் தீர்வைக் காண்பது கஷ்டமான விடயமல்ல. ஆனால் அரசாங்கம் அதனை விரும்பிச் செய்ய வேண்டும். இந்த அரசியல் தீர்வை தாமதிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் இனப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணமுடியாவிட்டால் ஒருபோதும் இந்த நாட்டில் இணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இந்தவேளையில், ஊடகங்களுக்கும் பங்களிப்பு இருக்கின்றது. மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக சிங்கள, தமிழ் ஊடகங்கள் பங்களிப்புச்செய்ய வேண்டும். மக்கள் தங்கள் கருத்தியலை தவறாக எடுத்தியம்புவதற்கு ஊடகங்கள் வழிவகுக்கக் கூடாது.

ஒரு நாட்டினுடைய ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்படுவதற்கு நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். ஊடகங்கள் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

இதேவேளை, நாட்டைப் பிரிப்பதைத் தவிர்ப்பதற்கு ஒரேயோரு வழி அதிகாரப் பகிர்வேயாகும். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுவதன் மூலம் நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் திருப்தியடைவார்களாக இருந்தால் நாட்டைப் பிரிப்பதற்கு வழியிருக்காது.

இந்த செய்தியையும் ஊடகங்கள் தெளிவாக மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். முக்கியமாக பெரும்பான்மை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email