SHARE

இரு சிங்களவர்கள் உட்பட மேலும் 10 பேர் வழக்குத்தாக்கல்

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கனடா பிரஜையான றோய் சமாதானம் என்பவர் கோத்தபாயாவினால் தான் அனுபவித்த சித்திரவதைகளுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையிலேயே தற்போது மேலும் 10 பேர் குறித்த வழக்கில் கோத்தபாயவிற்கு எதிராக இணைக்கப்பட்டுள்ளனர்.

ஜஸ்மின் சூக்காவை தலைமையாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பு (ITJP) , பாதிக்கப்பட்டவர்களை நீமதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிநிதித்துவம் செய்யும் சட்ட நிறுவனமான கோஸ்பீல்ட் உடன் இணைந்து நேற்றைய தினம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், மேற்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் அப்போதைய பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட இராணுவமுகாம்கள் பொலிஸ் நிலையங்களில் அவர்கள் அனுபவித்த சித்திரவதைகளை முழுமையாக விபரிக்கப்பட்டுள்ளது.

சூடாக்கப்பட்ட இரும்புக்கம்பிகளால் தாக்கினார்கள், கேபிள்களால் அடித்தார்கள், பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகளால் முகத்தை மூடி மூச்சுதிணறச்செய்தார்கள் என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத அவர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச ஆள்கடத்தல் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவு மற்றும் கப்பம் பெறுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட படையினரிற்கு பொறுப்பாகயிருந்தார் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற காலத்தில் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையென்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்களை சித்திவதை செய்தவர்கள் யார் என்பதையும் நேரடியாக குறிப்பிட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையின் முக்கிய விசாரணை அதிகாரியான நிசாந்த டி சில்வா இரு தடவைகள் தங்களை கொழும்பில் தாக்கினார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிசாந்த டி சில்வா என்னை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கினார் என பாதிக்கப்பட்ட ஒருவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டீ.ஐ.டி. யின் கொழும்பிற்கான பொறுப்பதிகாரியாக காணப்பட்ட பிரசன்ன டி அல்விஸ் என்பவரிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை வழக்கு தாக்கல் செய்தவர்கள் சுமத்தியுள்ளனர்.

அவர் சித்திரவதைகளிற்கு உத்தரவிட்டதுடன் சில வேளைகளில் நேரடியாக அதில் ஈடுபட்டார் அவரிற்கு கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து நேரடி உத்தரவுகள் கிடைத்தன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வழக்கு தாக்கல் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயல்திட்டம் மற்றும் வழக்கினை செயல்படுத்தும் நட்ட நிறுவனமான கோஸ்பீல்ட ஆகிய இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கியினை பார்வையிட இங்கே அழுத்தவும்

Print Friendly, PDF & Email