SHARE

தென்னிலங்கையில் தன்னை ஒரு கதாநாயகனாக சித்தரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அதனாலேயே அவர் விடுதலைப் புலிகள் போதைப்பொருள் விற்றார்கள் என அநாகரீகமான கருத்துக்களை வெளியிட்டாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் போதைப் பொருள் வர்த்தகத்தின் மூலமாகவே பொருளாதார பலத்தைப் பெற்றார்கள் என்ற கருத்தை ஜனாதிபதி நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாகவே இன்று (செவ்வாய்க்கிழமை) யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, வட. மாகாண அவைத் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பன்னாட்டு வர்த்தகத்தில், போதைப்பொருள் வர்த்தகத்தில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

ஜனாதிபதி 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யப்போவதாக கூறியிருக்கின்றார். போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்போவதாக கூறியிருக்கின்றார். இவை அனைத்திற்கும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த எதிர்ப்புகளில் இருந்து தப்புவதற்காக, தன்னையொரு கதாநாயகனாக சித்தரிக்கவே இவ்வாறு புலிகள் மீது குற்றம் சாட்டுகிறார்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email