SHARE

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியாவிற்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் எவரும் தாம் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படுவோம் என அச்சப்படும் நிலை காணப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மரணதண்டனைகளை மாற்றி தண்டனை குறைப்பை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கையில் காணப்பட்ட பரந்துபட்ட எதிர்ப்பின் பின்னணியிலேயே நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது என பிராஜ் பட்னாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நீதிமன்றங்களிலும் ஊடகங்களிலும் வீதிகளிலும் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் மாத்திரமன்றி,  சர்வதேச அளவிலும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான எதிர்ப்பு வெளியிடப்பட்டதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குரல்களை செவிமடுப்பதும் மனித உரிமைகளை மதிப்பதும் மரணதண்டனை நிறைவேற்றம் தொடர்பான இலங்கையின் தசாப்தகால நிலைப்பாட்டினை தொடர்வதும் மரணதண்டனையை முற்றாக இல்லாமல் செய்வதுமே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email