SHARE

ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது.

கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 16ஆம் திகதி அன்று தென்கயிலை ஆதினத்தால், கன்னியா தமிழரின் பூர்வீகம் என்பதை அடையாளப்படுத்தும் நடவடிக்கையாக வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த கவனயீர்ப்புக்குச் சென்ற பலர் குறிப்பாக வெளியிடங்களிலிருந்து சென்றவர்கள் இராணுவ, பொலிஸார் சோதனைச் சாவடிகளைக் கடந்து மிரட்டல்களுக்கும் இராணுவ கண்காணிப்புகளுக்கும் மத்தியில் சென்றடைந்ததையும் களத்தில் நடந்த சம்பவங்களையும் பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

பல நூற்றாண்டுகளாக சைவ சமயத்தோரும் அதன் இதிகாச வரலாற்றோடும் தொடர்புடைய கன்னியா வெந்நீரூற்றையும் அதை அண்டியிருந்த கன்னியா பிள்ளையார் கோயிலையும் தொல்லியல் திணைக்களம் அபகரித்ததை யாவரும் அறிந்தனர்.

கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் பௌத்த விகாரையின் வரலாறு ஒரு தசாப்ததிற்குட்பட்டது. தமிழரின் பூர்வீகம் வரலாற்றில் திரிவுபடுத்தப் படுகின்றது.

அங்கே, சிங்கள பௌத்த தேசியம் தன்னை ஒரு பூர்வீக தூய்மையான கலப்பற்ற இனமாக சித்தரிக்க முற்படுகின்றது. இவ் அரசியல் நிகழ்ச்சி ஏனைய இனங்களின் பூர்வீகத்தையும் அதன் வரலாற்றையும் கேள்விக்குட்படுத்தி மாற்றியமைக்க முற்படுகின்றது.

கன்னியாவின் பூர்வீகம் தமிழின இருப்பின் பூர்வீகம். பிள்ளையார் கோயிலில் வழிபாடு செய்யச் சென்ற சமயக் குருக்களையும் பக்தர்களையும் பொலிஸார் தடை செய்தது என்பது ஒரு சமயத்திற்குரிய வழிபடுகின்ற உரிமையை மறுத்தலாகும்.

மத வழிபாடு செய்வது நாட்டின் இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பது அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறெனில் வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னர் காளான்களாக முளைத்த பௌத்த விகாரைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

இவ்வாறான நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, அது சிங்கள பௌத்தர்களுக்குரியது என்பதையே சுட்டிக்காட்ட முனைகின்றது.

இவ்வாறு ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பையே அழித்தலாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email