SHARE

பிரசாத்

லண்டனில் நேற்று சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட ஈழத்து முழு நீள திரைப்படமாகிய “சினம்கொள்” எதிர்பாராத அளவில் பெருவெற்றியை ஈட்டியுள்ளது. 

லண்டன் ஈஸ்ட்காம் Boleyn திரையரங்கில் மாலை 7 மணிக்கு திரையிடப்பட்ட இந்த படத்தை பார்க்க மக்கள் நூற்றுக்கணக்காக திரண்டிருந்தனர். திரையரங்கம் நிரம்பி மக்கள் இருக்க இடம் இல்லாமல் பலர் கால்கடுக்க நின்று ஆர்வத்துடன் பார்த்த ஒரு உண்மை கதை இது. 

இலங்கையில் இருந்து 1993 ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு சினிமா துறையில் பட்டம் பெற்று இந்தியாவில் உதவி இயக்குனராக பயிற்சி பெற்று, பல விருது பெற்ற குறும்படங்களை வெற்றிகரமாக தயாரித்து வழங்கிய, ஈழத்து இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அவர்களின் முதல் முழு நீள திரைப்படம் இது.

பல வருட சிறை வாழ்க்கையை அனுபவித்து விட்டு யுத்தம் முடிந்த பின் தனது ஊருக்கு வரும் ஒரு முன்னாள் விடுதலைப்புலி போராளியின் கதை. ரயிலில் வந்து கிளிநொச்சியில் இறங்கும் அந்த போராளியின் பெயர் அமுதன். அந்த போராளி யுத்தத்தின் பின் கிளிநொச்சியில் வந்து அவனது சொந்த ஊரை பார்ப்பதற்கு பதற்றத்துடன் வருகிறான் ஆனால் அது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவனது குடும்பத்தை பார்க்க யாழ்ப்பாணம் போகின்றான். அங்கு அவன் அவனது குடும்பத்தை சந்தித்தானா? எப்படியான பிரச்சனைகளை அவன் அங்கு சந்திக்கிறான்? தற்போது உள்ள ஈழம் எப்படியானது? தற்போது புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் மக்கள் எப்படி ஒரு போராளியிடம் அங்கு நடந்து கொள்கிறார்கள்? இறுதியில் ஒரு போராளியாக இருந்ததால் எப்படியான சிக்கல்களை அவன் எதிர் கொள்கிறான்? தன்னுடைய போர் அனுபவத்தை வைத்து அவன் அதை எப்படி எதிர் கொள்கிறான் ? என்பதை இயக்குனர் அழகாக காட்டியுள்ளார்.

முற்று முழுதாக ஈழத்து கலைஞர்களையும் ஒரு சில இந்திய கலைஞர்களையும் வைத்து தற்போதைய நிலைமையை அழகாக விவரித்துள்ளார். அதிலும் கடைசியில் கதாநாயகன் சொல்லும் ஒரு வார்த்தை “நாங்கள் எல்லாரும் ஆற்ற பிள்ளையள் தெரியும் தானே” என்பது புல் அரிக்க வைக்கின்றது. 

நாங்கள் தினமும் பார்க்கும் செய்திகளின் உண்மை தன்மை இந்த படம் மூலம் தெரிகின்றது .

எதிர் வரும் நாட்களில் ஐரோப்பாவின் பல நாடுகளில் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் நடக்க இருக்கின்றது.நேற்று லண்டன் இல் இருக்க இடம் இல்லாமல் பலர் கால்கடுக்க நின்று பார்த்தது போல எல்லா நாடுகளிலும் உங்களது ஆதரவை கட்டிடவேண்டும். இதுவே நாங்கள் தற்போது செய்ய வேண்டிய கடமை.

ஒரு இயக்குனராக ரஞ்சித் ஜோசப் தனது கடமையை செய்து கொண்டு இருக்கிறார் ஆகவே அதை உலகிற்கு எடுத்து காட்டவேண்டியது எங்கள் ஒவ்வொருவரின் கடமை. விரைவில் உலகம் பூராக இந்த திரைப்படம் வெளிவரும் அதை எடுத்து காட்டுவது தமிழரின் பெருமை. 

சினம்கொள் இறுதியில் எல்லோரின் முகத்திலும் இனம் பேச வைத்துள்ளது. 

Print Friendly, PDF & Email