SHARE

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் வழங்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.

கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் பதுங்கிருந்த மூவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்தனர்.

அவர்களில் இருவர், இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட போது பின்னால் நான்காவது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்தேகநபர்களைத் தேடி தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதால் கைது செய்யப்பட்டோரின் விவரத்தை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர்.

பொலிஸாரின் கண்ணில் தென்பட்டுத் தப்பித்த 5 பேரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email